எருமாடு அருகே குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு


எருமாடு அருகே குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 March 2018 3:30 AM IST (Updated: 24 March 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

எருமாடு அருகே குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே இன்கோ நகர் பகுதியில் சேரம்பாடி, கையுன்னி, எருமாடு, தாளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் இன்கோ நகர் பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குப்பை கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட வில்லை. இதை கண்டித்து நேற்று காலை 9½ மணிக்கு இன்கோநகர் பகுதி மக்கள் சுமார் 300 பேர் திரண்டனர். அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு எருமாடு கிராம நிர்வாக அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், அனுமதியின்றி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்றார். உடனே பொதுமக்கள், குப்பைகளை கொட்டுவதால் மழைக்காலத்தில் குடிநீருடன் அசுத்தம் கலக்கிறது. அந்த நீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பை கொட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை அறிந்த கூடலூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், சேரங்கோடு ஊராட்சி செயலர் சஜீத், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பந்தலூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் விரைந்து வந்து 3 மாதங்கள் மட்டும் குப்பை கொட்டப்படும். பின்னர் வேறு இடம் தேர்வு செய்யப்படும் என்றார். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story