மீன்பிடி வலையை மீட்க கடலில் குதித்த புதுவை மீனவர் மாயம்: கதி என்ன? தேடும் பணி தீவிரம்


மீன்பிடி வலையை மீட்க கடலில் குதித்த புதுவை மீனவர் மாயம்: கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 March 2018 4:45 AM IST (Updated: 24 March 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி வலையை மீட்க கடலில் குதித்த புதுவையைச் சேர்ந்த மீனவர் மாயமானார். அவரது கதி என்ன? என்பது குறித்து தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

அரியாங்குப்பம்,

புதுச்சேரி மாநிலம் வம்பாக்கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 45), மீனவர். நேற்று காலை இவரும், மற்றொரு மீனவர் கனகராஜும் (37), மீன்பிடிப்பதற்காக வீராம்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு சிறிய பைபர் படகில் கடலுக்கு சென்றனர். துறைமுக முகத்துவார பகுதியில் அவர்கள் படகு சென்றபோது படகில் மீன்பிடிப்பதற்காக சுருட்டி வைத்திருந்த மீன்வலை திடீரென படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்துவிட்டது.

இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வலையை மீட்பதற்காக மீனவர் ரஞ்சித் படகில் இருந்து கடலில் குதித்தார். பின்னர் தண்ணீரில் மூழ்கி வலையை தேடினார்.

ஆனால் தண்ணீரில் மூழ்கி வெகு நேரமாகியும் ரஞ்சித் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மற்றொரு மீனவர் கனகராஜ் படகில் இருந்து குதித்து மீனவர் ரஞ்சித்தை தேடிப்பார்த்தார். ஆனால் ரஞ்சித்தை கண்டு பிடிக்க முடியவில்லை. உடனடியாக அவர் படகில் கரைக்கு திரும்பினார். அங்கிருந்த சக மீனவர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். உடனே மீனவர்கள் சிலர் உடனடியாக தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு முகத்துவாரம் பகுதிக்கு சென்று ரஞ்சித்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களாலும் ரஞ்சித்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி அரியாங்குப்பம் போலீசாருக்கும், கடலோரக் காவல் படையினருக்கும் மீனவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலோர காவல் படையினர், மீனவர்கள் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் இணைந்து மீனவர் ரஞ்சித்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ரஞ்சித் கடலில் மூழ்கிய இடம் முகத்துவாரப் பகுதி என்பதால் அங்கு சுமார் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கடலுக்குள் நீரோட்டம் திசைமாறுவது வழக்கம். எனவே அதன்படி திசை மாறிய நீரோட்டத்தால் ரஞ்சித் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்க வாய்ப்பு உள்ளது என்பதால் கடற்கரையோரம் தேடும் பணியும் நடந்து வருகிறது.

கடலில் மூழ்கிய ரஞ்சித்துக்கு சுதா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் காரணமாக வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Next Story