நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஆபத்து


நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் ஆபத்து
x
தினத்தந்தி 24 March 2018 1:32 PM IST (Updated: 24 March 2018 1:32 PM IST)
t-max-icont-min-icon

நுண்ணுயிர்க் கொல்லி மாத்திரைகளால் நம் உடல் கடுமையான சிக்கலைச் சந்திக்கும்.

ளி, காய்ச்சல் என்று கூறி மருந்துக்கடைகளில் நாம் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். இதை ஒரு நாள் மட்டும் உட்கொள்ளலாமா என்று கேட்டால் கண்டிப்பாகக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். நோய்த் தொற்று கிருமியை எதிர்க்கக்கூடிய நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை ஒரு நாளைக்கு மட்டும் நாம் பயன்படுத்தும்போது நாளடைவில், அந்தக் கிருமி நுண்ணுயிர்க் கொல்லி மருந்தையே எதிர்க்கக் கூடிய திறனை பெற்றுவிடும். வயிற்றுப் போக்கிற்கு மருந்துக் கடைகளில் வாங்கும் மருந்தில் புளூரோ குயினலோன்ஸ் என்ற வேதிப் பொருள் இருக்கும். நோய்த் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை அந்த மருந்து இழந்துவிட்டால், நம் உடல் கடுமையான சிக்கலைச் சந்திக்கும். நோய்த் தொற்றில் இருந்து உடல் சீரடையாது.

இன்றைக்கு எந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து உலகில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது முதலில் விற்பனைக்கு வருவது இந்தியாவில் தான். இதற்கு முக்கியக் காரணம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை தவறுதலாகவும், தேவையில்லாமலும் பயன்படுத்துவதுதான். இதனால் புதிதாக வரும் நுண்ணுயிர்கள் சில நாட்களிலேயே நுண்ணுயிர்க் கொல்லியை எதிர்க்கக் கூடிய ஆற்றலை பெற்றுவிடுகின்றன. நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை தவறுதலாக பயன்படுத்துவதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகச் சுகாதார நிறுவனம் உலக நுண்ணுயிர்க் கொல்லி விழிப்புணர்வு வாரத்தை நவம்பர் மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை கடைபிடிக்கிறது.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை கொடுக்கும்போதே மருத்துவர்கள், நோய்க் கிருமி தொற்றில் இருந்து எப்படி தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் சேர்த்தே ஏற்படுத்த வேண்டும்.

தேவையான போது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை முறையான, தரமான, சரியான அளவில் வழங்குவது மட்டுமல்லாமல், அதை எப்படி முறையாக உட்கொள்ள வேண்டும் என்றும், அதன் பக்க விளைவுகள், நன்மைகள் பற்றியும் நோயாளிகளுக்கு விளக்க வேண்டும். மருந்துக் கடை நடத்துபவர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரு போதும் கொடுக்கக் கூடாது.

சாதாரண காய்ச்சல், சளி என்று வரும் நோயாளிகளுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் தேவையில்லை என்பதை எடுத்துக் கூற வேண்டும். நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எத்தனை வேளை உட்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும் எனத் தெளிவாக விளக்கி, எழுதிக் கொடுக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

Next Story