நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது


நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 25 March 2018 4:00 AM IST (Updated: 24 March 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

நாகர்கோவில்,

மண்டைக்காடு அருகே உள்ள நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 3–ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம், மலர் நிவேத்யம் போன்றவை நடக்கிறது. 5 மணிக்கு பொட்டல் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து யானை மீது திருக்கொடி பவனி நடைபெறும். பவனி கோவிலை வந்தடைந்ததும் காலை 7.40 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்குதல், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, அன்னதானம், 2 மணிக்கு கோலப்போட்டி, மாலை 5 மணிக்கு 3008 திருவிளக்கு பூஜை போன்றவை நடக்கிறது.

திருவிழா நாட்களில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 1–ந் தேதி வரை  பஜனை, திருவாசகம் முற்றோதல், அன்னதானம், ஆன்மிக உரை, வில்லிசை, சிவபுராணம், இசை சொற்பொழிவு, சமய மாநாடு போன்றவை நடக்கிறது.

சந்தன குட ஊர்வலம்

வருகிற 2–ந் தேதி காலை 7 மணிக்கு கருமன்கூடல் அய்யா வைகுண்ட சாமி நிழல்தாங்கலில் இருந்து யானை மீது சந்தன குட ஊர்வலம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 10.30 மணிக்கு சிறப்பு அன்னதானம் போன்றவை நடைபெறுகிறது.

விழாவின் இறுதி நாளான 3–ந் தேதி காலை 7 மணிக்கு கடலுக்கு சென்று நீராடி புனித நீர் கொண்டு வருதல், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜரெத்தினம், சிவராஜ், சடையன், நாகராஜன் உள்பட பலர் முன்னிலை வகிக்கிறார்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் பரிசு வழங்குகிறார். இரவு 10 மணிக்கு கொடை சிறப்பு பூஜை, ஒடுக்கு பூஜை போன்றவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Next Story