எமரால்டு பஜாரில் சிலிண்டர்கள் வெடித்ததால் ஓட்டல் எரிந்து நாசம்


எமரால்டு பஜாரில் சிலிண்டர்கள் வெடித்ததால் ஓட்டல் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 25 March 2018 3:15 AM IST (Updated: 25 March 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் அருகே எமரால்டு பஜாரில் சிலிண்டர்கள் வெடித்ததால் ஓட்டல் எரிந்து நாசமானது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எமரால்டு பஜாரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 55). இவர், கடந்த பல ஆண்டுகளாக மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு ஊழியர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இரவு சுமார் 12 மணியளவில் எமரால்டு பஜாரில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்து பார்த்த போது ராமச்சந்திரனின் ஓட்டல் தீப்பற்றி மளமளவென எரிந்து கொண்டிருந்தது.

இது குறித்த தகவலின் பேரில் எமரால்டு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சத்யன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர் கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித் தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வர தாமதம் ஆனது. இதற்கிடையில் போலீசார் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனர்.

ஊட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள எமரால்டு பஜாருக்கு 1 மணி நேரம் கழித்து தீயணைப்பு வாகனம் வந்தது. பின்னர் அவர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். தீ விபத்தில் ஓட்டலின் மேற்கூரை அப்படியே கீழே விழுந்து கிடந்தது. மேலும் ஓட்டலில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் ஓட்டலில் தீப்பிடித்து எரிந்து பொருட்கள் நாசமானது தெரிய வந்தது. எனவே அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஓட்டலில் சிலிண்டர் வெடித்த போது ஆட்கள் யாரும் இல்லாததாலும், இரவு நேரம் என்பதாலும் உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தீ விபத்து குறித்து எமரால்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குந்தா தாலுகா மஞ்சூர் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் மஞ்சூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வாகனங்கள் ஊட்டியில் இருந்து வருவதற்குள் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விடுகிறது. மஞ்சூரில் தீயணைப்பு நிலையம் இருந்திருந்தால் தீவிபத்து ஏற்பட்ட உடனேயே அணைத்து இருக்க முடியும். விபத்து தவிர்க்கப்படுவதோடு, பொருட்கள் சேதத்தையும் தவிர்க்க முடியும். எனவே தீ விபத்தில் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன்னதாக மஞ்சூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 

Related Tags :
Next Story