அன்வர்ராஜா எம்.பி. மகன் மீது போலீஸ் சூப்பிரண்டிடமும் பெண் தொழில் அதிபர் புகார்


அன்வர்ராஜா எம்.பி. மகன் மீது போலீஸ் சூப்பிரண்டிடமும் பெண் தொழில் அதிபர் புகார்
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அன்வர்ராஜா எம்.பி. மகன் மீது சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் புகார் மனு அளித்துள்ளார்.

ராமநாதபுரம்,

சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் பிரபல்லா சுபாஷ் என்ற ரொபினா. சென்னை வானொலி நிலையத்தில் தொகுப்பாளராக வேலை செய்துவரும் இவர் ஊடக பிரிவில் பங்குதாரராகவும் தொழில் செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் எம்.பி. அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும், வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருவதாகவும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று ராமநாதபுரம் வந்த அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிடம் ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

சிறந்த தொழில் முனைவோராக தேர்வு செய்யப்பட்ட எனக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலி அறிமுக மானார். கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த என்னிடம் தானும் மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறினார்.

மேலும், என்னுடன் பழகி வந்ததோடு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அவரது பேச்சை நம்பியதால் நாங்கள் இருவரும் சேர்ந்து சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி பகுதியில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். நாசர்அலி தனது தொழில் வளர்ச்சிக்காக பணம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூ.50 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளேன். தற்போது அவர் என்னை ஒதுக்கிவிட்டு வேறோரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதோடு நாசர் அலி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த ரொபினா நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். 

Next Story