திருப்பூர்-காங்கேயம் வழித்தடத்தில் அதிக கட்டணம் வசூலித்த 6 பஸ்களுக்கு நோட்டீஸ்


திருப்பூர்-காங்கேயம் வழித்தடத்தில் அதிக கட்டணம் வசூலித்த 6 பஸ்களுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 March 2018 3:30 AM IST (Updated: 25 March 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர்-காங்கேயம் வழித்தடத்தில் அதிக கட்டணம் வசூலித்த 6 பஸ்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர்-காங்கேயம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல்செய்வதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாஸ்கர், கோகுலகிருஷ்ணன் மற்றும் வட்டார போக்குவரத்துத்துறையினர் நேற்றுகாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திருப்பூர் அருகே நல்லூர் பகுதியில் நின்று திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, காங்கேயத்தில் இருந்து திருப்பூர் வந்த மற்றும் திருப்பூரில் இருந்து காங்கேயம் சென்ற பஸ்களை அதிகாரிகள் மறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 அரசு பஸ்கள் மற்றும் 4 தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணத்தை பயணிகளிடம் வசூல் செய்தது கண்டறியப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த 6 பஸ்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அபராதம் விதிக்கப்பட்ட பஸ்களில் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் தனியார் பனியன் நிறுவன பஸ்களும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட 3 பஸ்கள் சிக்கின. அந்த 3 பஸ்களின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 3 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டு, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அத்துடன், நேற்று நடந்த வாகன தணிக்கையின் போது, உரிய ஆவணங்களின்றி சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை, பனியன் நிறுவன தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மட்டும் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் விதிமுறைகளை மீறியதாக 22 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் காலை நேரம் அதிக போக்குவரத்து மிகுந்த சாலையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story