வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்தும்போது “விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது” மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்தும்போது “விசாரணை என்ற பெயரில் போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது” மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 March 2018 3:15 AM IST (Updated: 25 March 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி பிரார்த்தனை கூட்டம் நடத்துவதாக கூறி விசாரணை என்ற பெயரில் வீடுபுகுந்து தொந்தரவு செய்யக்கூடாது என்று போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லை மாவட்டம் சிங்கையைச்சேர்ந்த சவுந்தரபாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

நான் கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக உள்ளேன். ராஜகோபாலபேரி கிராமத்தில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டினேன். அந்த வீட்டில் வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவது வழக்கம். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதாக ஒரு சிலர் வேண்டுமென்றே கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பேரில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கலெக்டரிடம் அனுமதி பெறாமல் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறி போலீசார் தொந்தரவு செய்கின்றனர்.

இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. குடியிருக்கும் வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதி பெறத் தேவையில்லை என்று ஏற்கனவே ஒரு வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கு.சாமிதுரை, எம்.ஞானகுருநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “குடியிருக்கும் வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை. எனவே மனுதாரர் வீட்டில் விசாரணை என்கிற பெயரில் நுழைந்து மனுதாரரை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story