72 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


72 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

72 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் திருமாநிலையூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில் 72 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 69 லட்சத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீட்டுமனை பட்டாவை பயனாளிகளிடம் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் வழங்குவதிலே முதன்மை மாநிலமாக திகழும் தமிழக அரசின் சார்பில் கரூர் மாவட்டத்தில் நீண்ட நாளாக பட்டா இல்லாமல் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 738 நபர்களுக்கு ரூ.38 கோடியில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 72 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 69 லட்சத்தில் வழங்கப்பட்டது.

இதுபோன்று கரூர் மாவட்டத்தில் பட்டா இல்லாமல் குடியிருக்கும் மக்கள் கோரிக்கை விடுத்தால் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நடவடிக்கை எடுக்கும்

இதைத்தொடர்ந்து கலெக்டர் அன்பழகன் பேசுகையில், தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், குடியிருக்க பசுமை வீடுகளையும் வழங்கி வருகிறது. தேவையானவர்கள் விண்ணப்பித்தால் உடனே வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

புகைப்பட கண்காட்சி திறப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி கரூர் பஸ் நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார். மேலும் ஓராண்டு சாதனை தொடர்பான வில்லைகளை பஸ்களில் ஒட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கீதா எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செந்தில்குமார், எழிலரசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story