அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் தீக்குளிக்க போவதாக விவசாயி மிரட்டியதால் பரபரப்பு


அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் தீக்குளிக்க போவதாக விவசாயி மிரட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின் போது விவசாயி தீக்குளிக்க போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னம்,

குன்னம் அருகே துங்கபுரம் கிராமத்தில் ஆணை வாரி ஓடை உள்ளது. இந்த ஓடையின் முன்பகுதியில் விவசாயி கருப்பனுக்கு (வயது 45) சொந்தமான வயல் உள்ளது. பின்பகுதியில் விவசாயி சக்திவேல் (35) என்பவருக்கு சொந்தமான வயலும் உள்ளது. இவர்கள் தங்களது நிலத்துடன் அரசு புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு இடையே பாதை பிரச்சினை தொடர்பாக குன்னம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.

சக்திவேல் தனது நிலத்தில் விளைந்துள்ள கரும்பை வெட்டி அறவைக்கு டிராக்டரில் கொண்டு செல்ல திட்டமிட்டார். ஆனால் டிராக்டரில் எடுத்து செல்ல முன்பகுதியில் கருப்பன் பயன்படுத்தி வந்த அரசு புறம்போக்கு இடத்தில் கூடுதலாக வழி தேவைப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து சக்திவேல் மாவட்ட கலெக்டர், குன்னம் தாசில்தார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர், குன்னம் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

இதனை தொடர்ந்து அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தியும், அதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் கரும்பு வெயிலில் காய்ந்து வரும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர், கருப்பன் ஆக்கிரமிப்பு செய்த பகுதியை அகற்றி வழி ஏற்படுத்தி தருமாறு தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஆக்கிரமிப்பு செய்த பகுதி வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், வரகூர் வருவாய் ஆய்வாளர் கீதா, குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், கிராம நிர்வாக அதிகாரி தேசிங்கு ராஜா ஆகியோர் முன்னிலையில் அகற்றும் பணி நடைபெற்றது.

பரபரப்பு

அப்போது கருப்பன், தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியை அகற்றி கொள்கிறேன் என்றும், சக்திவேல் ஆக்கிரமிப்பு செய்த பகுதியை அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அதிகாரிகள் மற்றும் கருப்பனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தாங்கள் (அதிகாரிகள்) ஒரு தலைபட்சமாக செயல்பட்டால் தீக்குளிப்பேன் என கருப்பன் மிரட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் கருப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள். அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கரும்பை டிராக்டரில் எடுத்து செல்ல மட்டும் வழிவிடுங்கள் என்று கூறினர். இதில் கருப்பனுக்கு உடன்பாடு ஏற்பட்டதால் ஆக்கிரமிப்பு பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். 

Next Story