புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஊர்வலம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 March 2018 4:15 AM IST (Updated: 25 March 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் கோட்டை முற்றுகை ஆயத்த ஊர்வலம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் தர்மராஜா கோவில் தெரு, பழையபேட்டை காந்தி சிலை, டி.பி.ரோடு, சின்னஏரிக்கரை வழியாக புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து கோட்டை முற்றுகை குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில தலைவர் பன்னீர்செல்வம், வேளாண்மை பட்டதாரிகள், ஆசிரியர்கள் சங்க மாநில பொருளாளர் ராமன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சவுந்தர்ராஜன், அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் நடராஜன் ஆகியோர் பேசினர்.

இதில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் நாராயணன், செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் பூங்காவனம், நிர்வாகிகள் ஜெயராமன், சிவப்பிரியா, பொன்நாகேஷ், ஹரிராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் நன்றி கூறினார். 

Next Story