பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் 6½ லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழப்பு


பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் 6½ லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழப்பு
x
தினத்தந்தி 25 March 2018 5:14 AM IST (Updated: 25 March 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்கள் தடையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்து இருப்பதாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் குடிபட்வா திருநாள் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட பைகள், டம்ளர்கள், தட்டுகள் உள்பட பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தினர் மராட்டிய சுற்றுச்சூழல் துறை மந்திரி ராம்தாஸ் கதமை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசின் தடை உத்தரவால் முழுநேர மற்றும் பகுதிநேர பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பல முடங்கி உள்ளன. இதனால் சுமார் 2 லட்சம் பேர் நேரடியாகவும், 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.

மேலும் மாநில அரசு துணிப்பைகளின் உற்பத்திக்காக மும்பை மாநகராட்சிக்கு ரூ.5 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. இது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களுக்கு எதிரான ஒருதலைபட்சமான நடவடிக்கையாகும். காகிதம் மற்றும் துணிப்பைகள் உற்பத்தி செய்வது மரங்கள் வெட்டப்படுவதை ஊக்குவிப்பதோடு, அதிகளவில் நீர் தேவையையும் உண்டாக்கும். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து அரசு மீண்டும் ஒருமுறை பரிசீலிக்க வேண்டும்.

ஏற்கனவே ஜி.எஸ்.டி.யால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய தடை உத்தரவு அனைவரையும் தொழிலை கைவிட்டு வெளியேறும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story