ஒவ்வொரு பரிசும் ஒரு பொக்கிஷம்!


ஒவ்வொரு பரிசும் ஒரு பொக்கிஷம்!
x
தினத்தந்தி 25 March 2018 12:09 PM IST (Updated: 25 March 2018 12:09 PM IST)
t-max-icont-min-icon

அன்பு மிகுந்தவர்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பரிசும் ஒரு பொக்கிஷம்தான்.

ன்பு மிகுந்தவர்களிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பரிசும் ஒரு பொக்கிஷம்தான். அதனால் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு நீங்கள் பரிசு கொடுக்க விரும்பினால் ரொம்ப பார்த்துதான் அதை தேர்ந்தெடுக்கவேண்டும். காலம் முழுக்க அது உங்கள் அன்பை வெளிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். பரிசில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அது கொடுப்பவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. வாங்குபவருக்கும் மகிழ்ச்சி தருகிறது. பணம் கொடுத்து வாங்கும் மற்ற எந்த பொருட்களுக்கும் இல்லாத சிறப்பு பரிசு பொருட்களுக்கு இருக்கிறது. காரணம், பரிசு பொருட்கள் நமது மனதோடு, உணர்வோடு சம்பந்தப்பட்டது.

நாம் இப்போது கொண்டாடும் விழாக்களுக்கு குறைவில்லை. ஆண்டுதோறும் பிறந்தநாள், திருமணவிழா போன்றவைகளும் வருகின்றன. 25-வது மணவிழா வருடத்தை கடந்த பின்பு, 50-வது பிறந்த நாளை கடந்த பிறகு பலருக்கு திருமணவிழாவும், பிறந்த நாள் விழாவும் ஒருவித வெளிப்படுத்த முடியாத கவலையை உருவாக்குகிறது.

அந்த கொண்டாட்டங்களின்போது தங்களுக்கு வயது அதிகமாகிக்கொண்டே போகிறது என்பதை உணர்ந்து, உள்ளுக்குள் வேதனைப்படுகிறார்கள். அப்போது அந்த வேதனை தேவையற்றது என்பதை உணர்த்தும் விதத்தில் அவரைவிட வயதானவர்களும், உறவினர்களும் வந்து வாழ்த்துகிறார்கள். பரிசுகளை வழங்குகிறார்கள். ‘நாங்கள் எவ்வளவு பேர் உன்னை சுற்றி மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீயும் எங்களைப் போல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்’ என்று சொல்லாமல் சொல்கிறார்கள். அதன் மூலம் அவரது வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறது. புதிய உற்சாகம் அவருக்குள் பொங்குகிறது.

முன்பெல்லாம் உற்றார் உறவினர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி வாழ்ந்தார்கள். இப்போதைய சூழ்நிலை அப்படியில்லை. பெரும்பாலானவர்கள் வேலை காரணமாகவும், தொழில் காரணமாகவும் தூரமான பகுதிகளில் வசிக்கிறார்கள். அதனால் அடிக்கடி சந்தித்து அன்பை பகிர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள் உறவையும், நட்பையும் புதுப்பித்துக்கொள்ள, சுப நிகழ்ச்சிகளில் பரிசுகளை வழங்குகிறார்கள். கோப தாபங்கள், விவாதங்கள், நெருடல்கள் எல்லாவற்றையும் அந்த பரிசு பொருட்கள் தீர்த்து, நெருக்கத்தை உருவாக்கிவிடுகின்றன.

வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. அதுபோல் மனிதர்களிடமும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. சிலர் வளமான வாழ்க்கை வாழ்பவராகவும், சிலர் கஷ்டப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். முதுமையோடு போராடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வயதானவர்கள் மூலம் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசுகள், ‘நாங்கள் இன்னமும் உங்களை நினைவில் வைத்திருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள். எப்போதும் இதுபோல் நாங்கள் உங்கள் மீது அன்பு செலுத்துவோம்’ என்பது போன்ற உத்திரவாதங்களை அளிக்கின்றன.

பரிசுகள் மகத்துவமானவை. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு சிறிய பரிசு சொல்லிவிடும். ஏழைத் தொழிலாளி ஒருவர் மண் பாண்டம் ஒன்றை சிரமப்பட்டு செய்து கொண்டிருந்தார். பலமுறை முயற்சித்தும் அந்த மண்பாண்டம் அவர் எதிர்பார்த்த வடிவினை பெறவில்லை. மனச்சோர்வுடன் அமர்ந்திருந்த அவரது காதில் எங்கிருந்தோ ஒரு இனிய நாதம் ஒலித்தது. அதைக்கேட்டு உற்சாகமடைந்து மீண்டும் அதை செய்ய முயற்சித்தார். அப்போது அந்த மண்பாண்டம் சரியான வடிவத்தில் வந்துவிட்டது. அந்த தொழிலாளி அகம் மகிழ்ந்தார். மனம் மகிழ்ச்சியாக இருந்தால் செயல்கள் முழுவடிவம் பெறும் என்பதை உணர்ந்தார். தினமும் அந்த பாடலுக்காக ஏங்கினார். அதுவும் அவர் காதுகளை வந்தடைந்தது. மகிழ்ச்சியாக தனது வேலையை முடித்தார்.

ஒருநாள் அந்தக்குரல் வந்த திசையை நோக்கி சென்றார். அங்கே ஒருவர் உட்கார்ந்து பாட்டுப்பாடிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று அவரது குரல்வளத்தை பாராட்டி, தான் உருவாக்கிய மண்பாண்டம் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். பரிசை வாங்கிக்கொண்ட அந்த பாடகர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

இது நடந்த சில நாட்கள் கழித்து அந்த நாட்டு அரசர், அந்த மண்பாண்ட தொழிலாளியை அழைத்துவர வீரர்களை அனுப்பிவைத்தார். அவர் பயந்தபடி அரண்மனைக்கு சென்றார். அங்கே அரசவையில் வீற்றிருந்த மனிதரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் வேறுயாருமல்ல. பாட்டுப்பாடி, இவரிடம் பரிசு பெற்ற நபர்தான். அவர் அருகில் அந்த மண்பாண்டமும் இருந்தது.

‘நீ கொடுத்த பரிசு விலைமதிப்பற்றது. நான் யார் என்று தெரியாமலே, எந்த எதிர்பார்ப்புமின்றி உள்ளன்போடு என்னை பாராட்டி நீ இந்த பரிசினை கொடுத்தாய். இதை என் வாழ்நாள் உள்ளவரை பெருமையோடு பாதுகாப்பேன்' என்றார், அந்த அரசர்.

பரிசு என்பது பொருளால் அமைந்த விஷயம் அல்ல, உணர்வால் அமைந்த விஷயம். அதனால் நாம் என்ன பரிசு கொடுக்கிறோம் என்பதைவிட, என்ன உணர்வோடு அதை கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். அன்பால் கொடுப்பது சிறிய பரிசு பொருளாக இருந்தாலும், அதில் நேசம் நிரம்பி வழியும்.

Next Story