எத்தனை நிமிடம் குளிக்கலாம்?


எத்தனை நிமிடம் குளிக்கலாம்?
x
தினத்தந்தி 25 March 2018 12:36 PM IST (Updated: 25 March 2018 12:36 PM IST)
t-max-icont-min-icon

ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம்? என்ற கால அளவு ஒன்று இருக்கிறது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும்.

வ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம்? என்ற கால அளவு ஒன்று இருக்கிறது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கிறதா? இருக்கிறது.

தண்ணீரும் இருக்கிறது. தேவையான நேரமும் இருக்கிறது என்பதற்காக நீண்ட நேரம் குளிக்கக்கூடாது. வீட்டில் குளிப்பவர்கள் பத்து நிமிடங்கள் குளித்தால்போதும். அருவி போல் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீரில் சற்று அதிக நேரம் குளிக்கலாம். ஆறு போல் ஓடும் நீரிலும் சற்று அதிக நேரம் குளிக்கலாம். நீண்ட நேரம் குளிக்கும்போது சருமத்தில் உள்ள இயற்கை ஈரப்பதம் குறைய தொடங்கிவிடும்.

வெந்நீரில் குளிக்க பலரும் விரும்புகிறார்கள். மாலை நேரத்தில் களைப்புடன் வீடு திரும்பும்போது வெந்நீரில் குளித்தால் உடல் அலுப்பு நீங்கிவிடும் என்று நினைப்பார்கள். அதையே வழக்கமாக்கிக்கொள்ளக்கூடாது. ஏனெனில் சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளுக்கு வெந்நீர் கேடு விளைவித்துவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் குளியல் சோப்பிலும் கவனம் செலுத்துங்கள். அடிக்கடி சோப்புகளை மாற்றிக்கொண்டிருக்கக்கூடாது. அதில் சேர்க்கப்படும் வாசனைத்திரவியங்கள், வேதிப்பொருட்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சருமத்திற்கு பொருந்தாதது அதில் சேர்க்கப்பட்டிருந்தால், அலர்ஜி ஏற்பட்டுவிடும்.

குளித்து முடித்தவுடன் தலையை, தண்ணீர்த்தன்மை இல்லாத டவல் மூலம் நன்றாக துவட்டவேண்டும். அதுபோல் உடலில் படிந்திருக்கும் நீர்த்திவலைகளையும் நன்றாக துடைத்தெடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அதுவும் சரும பாதிப்புக்கு காரணமாகிவிடும்.

தலைக்கு குளிக்காமல் உடலுக்கு மட்டும் அடிக்கடி குளிப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி குளிக்கும்போது உடலின் வெப்பநிலை மாறும். அதனை சீரான நிலைக்கு கொண்டுவர அனைத்து செல்களும், உறுப்புகளும் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் குளியல் சோப்பையும் அறிவியல்பூர்வமாக ஆராயுங்கள். அது உங்கள் சருமத்திற்கு பொருந்தவேண்டும். அதன் மணம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதைவிட, அதன் தரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதே சிறந்தது.

அடிக்கடி உடலுக்கு மட்டும் குளிப்பது பொடுகு தொல்லையை உருவாக்கும். தொடர்ந்து உடலுக்கு குளித்தால் முடி கொட்டுதல், தலைவலி போன்ற பிரச்சினைகள் தோன்றக்கூடும்.

குளிக்கும்போது ஷாம்புவை நேரடியாக தலையில் தேய்க்கக்கூடாது. அதனுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தேய்த்து கழுவ வேண்டும். ஷாம்புவை தினமும் பயன்படுத்துவதையும் தவிர்க்கவேண்டும். ஒவ்வொருவரின் முடியின் தன்மைக்கு பொருத்தமான ஷாம்புவை பயன்படுத்துவதே சரியானதாகும். விளம்பரங்களைப் பார்த்து அவ்வப்போது ஷாம்புவை மாற்றிக்கொண்டிருக்கவும்கூடாது.

Next Story