காணாமல்போன நிலா - சுபா


காணாமல்போன நிலா - சுபா
x
தினத்தந்தி 25 March 2018 12:52 PM IST (Updated: 25 March 2018 12:52 PM IST)
t-max-icont-min-icon

பூர்ணிமாவின் கேள்விக்கு அருண் பதில்சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

பூர்ணிமாவின் கேள்விக்கு அருண் பதில்சொல்லாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

“சொல்லு, அருண்.. முத்ராவைப் பாத்ததை ஏன் மறைச்சு, பொய் சொன்னே..?”

அருண் தன் அமைதியைக் கலைத்தான்.

“ஏன்னு தெரியல, பூர்ணிமா.. அன்னிக்கு திடீர்னு ஒரு பயம் வந்துடுச்சு.. எவ்வளவோ பேரை பார்க்கறோம். எல்லாத்தையுமா வந்து சொல்லிட்டிருக்கோம்..? முத்ரான்னு ஒரு பொண்ணைப்பத்தி மட்டும் அநாவசியமா எதுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லணும்னு கடைசி நிமிஷத்துல ஒரு சின்ன தடுமாற்றம்.. தப்புதான். ரொம்ப ரொம்ப ஸாரி..”

பூர்ணிமா அவனைக் கருணையுடன் பார்த்தாள். “நமக்குள்ள பொய் வேண்டாம், அருண்..”

அருணின் குரல் நெகிழ்ந்தது.

“இனிமே பொய் சொல்ல மாட்டேன். ஆனா, சத்தியமா உன்னைத் தவிர யார்மேலயும் எனக்கு எந்தவிதமான ஆர்வமும் வந்ததில்ல, பூர்ணிமா..”

“அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கு, அருண்..! இதை வளரவிட்டு, நான் மனசுக்குள்ளயே சந்தேகப்பட்டுட்டு இருந்தேன்னா, நாளைக்கு இது பெரிய பிரச்சினையா வெடிக்கும்னு தோணிச்சு.. இதைத் தீர்த்துக்கணும்னுதான் மோகன் வீட்டுக்கே உன்னைக் கூப்பிட்டேன்.. இனிமே முத்ராவைப் பார்த்தா, முத்ராவைப் பார்த்தேன்னு சொல்லு.. சித்ராவைப் பார்த்தா, சித்ராவைப் பார்த்தேன்னு சொல்லு..!” என்று பூர்ணிமா அருணை சற்றே இழுத்து அணைத்துக்கொண்டாள்.

“இனிமே முத்ராவைப் பார்த்தா, சிரிக்கக்கூட மாட்டேன்.. ஓகே..?”

“ஏய், நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டே..! உன் மேல அடுத்தவங்களுக்கு சந்தேகம் வரலாம். உனக்கே சந்தேகம் வரக்கூடாது அருண்..! நீ இயல்பா இரு.. தேவையில்லாம கற்பனையை வளர்த்து, என்னைக் குழப்பாதேனுதான் சொன்னேன்..”

அவள் அவ்வளவு சுலபமாக அவனை மன்னித்ததும், அருண் ஆடிப்போனான். அவன் கண்கள் ஈரமாகிவிட்டன.

“சீச்சீ.. முட்டாள்.. இதுக்கெல்லாம் கண்ல ஏன் தண்ணி வருது..? மனசை பொய்யிலயும், சந்தேகத்துலயும் அப்படி இப்படி அலையவிடாம நாம ஒரே குறிக்கோளா இருந்தாதான், இந்த கிரவுண்டை ஜெயிக்க முடியும். அதுக்காகதான் சொன்னேன்..”

“நிச்சயமா..” என்றான் அருண்.

* * *

இரண்டு வாரங்களில், அடுத்த போட்டிக்கான தகவல் வந்தது.

அதில் குறிப்பிட்டிருந்த சில வாக்கியங்கள் அருணை திடுக்கிட வைத்தன.

‘இந்தப் போட்டி உங்கள் தைரியத்துக்கு விடப்படும் சவாலாக இருக்கும்.. பலவீனமான இதயம் இருந்தாலோ, உயரங்கள் பற்றிய பயம் இருந்தாலோ, இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. கலந்துகொள்ளாதவர்கள், தோல்வியுற்றவர்களாகவே கருதப்படுவார்கள்..!’

“ஏய், என்ன இப்படிப் போட்டு பயமுறுத்தியிருக்காங்க..! என்ன போட்டியா இருக்கும்..?” என்று கேட்டான் அருண்.

“போய்ப் பார்த்தா தெரிஞ்சுரப்போவுது..” என்று தைரியமூட்டினாள், பூர்ணிமா.

* * *

“இந்தப் போட்டில கலந்துக்க நீங்க எங்க டாக்டர்கிட்ட சான்றிதழ் வாங்கிட்டு வரணும்.. உங்க ரெண்டு பேருக்கும் இதயத்துல எந்த பிரச்சனையும் இல்ல, ஆரோக்கியமாதான் இருக்கீங்கனு அவர் கடிதம் கொடுத்தாதான் போட்டில கலந்துக்க முடியும்..”

“முதல்ல இப்படிலாம் நிபந்தனை இருக்கும்னு சொல்லலியே? திடீர்னு இப்படி சொல்றீங்க!” என்று ஆட்சேபிக்கும் குரலில் சொன்னாள், பூர்ணிமா.

“அந்தந்தப் போட்டிகளுக்கு ஏத்த மாதிரி விதிகள் அமைக்கப்படும்னு நீங்க கையெழுத்து போட்டுக்கொடுத்த ஒப்பந்தத்துல இருக்கு..”

“ஒரு வேளை டாக்டர் சான்றிதழ்ல யாருக்குமே அனுமதி கெடைக்கலேனா..?”

“உங்களை மாதிரியே இன்னும் ரெண்டு பேரும் இதே சந்தேகத்தைக் கேட்டாங்க.. அப்படியொரு நிலைமை வராது.. வந்தா, வேற போட்டி வெச்சுப்போம்..” என்றாள், ஷீலா அமைதியாக.

“அப்படி என்னதான் அந்தப் போட்டி..?”

அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், “நீங்க இந்த டாக்டரைப் பார்த்துட்டு வந்துடுங்க..” என்று ஒரு முகவரி அட்டையை நீட்டினாள், ஷீலா.

* * *

மறுநாளே அந்த மருத்துவரைப் போய்ப் பார்த்தார்கள். அவர் இருவருக்கும் சில பரிசோதனைகள் செய்து, புன்னகையுடன் தன் முடிவை ஒரு கடிதமாக எழுதி அதை ஓர் உறையில் போட்டு, பிரிக்க முடியாதபடி ஒட்டிக் கொடுத்தார்.

“டாக்டர், எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுங்க..” என்றாள், பூர்ணிமா.

“அதுக்கு எனக்கு அனுமதி இல்லம்மா.. ஆனா, ரெண்டு பேருக்கும் போட்டில கலந்துக்க எந்தப் பிரச்சினையும் இருக்காது..”

* * *

“வாழ்த்துகள்..” என்று கைகுலுக்கினாள், ஷீலா. “மூணு ஜோடில ரெண்டு ஜோடிக்குதான் டாக்டர் சான்றிதழ் கெடைச்சிருக்கு.. அதுல நீங்களும் இருக்கீங்க..”

“இன்னும் எவ்வளவு நாள் போட்டியப்பத்தி சஸ்பென்ஸ் வெச்சுப் பேசுவீங்க..?” என்று சற்றே எரிச்சலுடன் கேட்டான், அருண்.

“சஸ்பென்ஸ்லாம் ஒண்ணுமில்ல.. ஞாயித்துக்கிழமை போட்டில கலந்துக்கும்போது தெரிஞ்சுரும்.. அன்னிக்கு அதிகமா சாப்பிடாம வாங்க..”

* * *

அது பெரிய மைதானம். நடுவில் மிக உயரமான ஒரு இரும்புக் கம்பம் நடப்பட்டிருந்தது. கம்பத்தின் அடிவாரத்தில், இருவர் அமரக்கூடிய நாற்காலி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

ஷீலா விளக்கமளித்தாள்.

“அந்தக் கம்பம் அறுபதடி உயரம். உங்க ரெண்டு பேருக்கும் கண்ணுல கருப்புத்துணி கட்டி கீழ இருக்கற அந்த நாற்காலில உக்காரவெச்சு, கட்டிப்போட்டுருவோம்.. ரெண்டு கை மட்டும் ப்ரீயா இருக்கும்.. அந்த நாற்காலி அப்படியே அந்தக் கம்பத்துல மேல மேல போகும். ஒரு குறிப்பிட்ட உயரத்துக்குப் போனப்புறம், அவுத்துவிட்டதுபோல தடால்னு செம வேகமா இறங்கும்.. கீழ விழறீங்களோனு உங்களுக்கு பயம் வரும். கண்ணு வேற மூடி யிருக்கறதால, என்ன நடக்குதுனு தெரியாம அடிவயத்துல பயம் கவ்வும்.. அந்த மாதிரி மூணு தடவை மேல போய் தடால்னு விழுவீங்க.. வாய்விட்டு அலறலாம்.. நாற்காலியோட கைப்பிடியை கெட்டியா பிடிச்சுக்கலாம்.. ஆனா தப்பித் தவறிகூட ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுக்கக்கூடாது..”

பூர்ணா அந்த உயரமான கம்பத்தை கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்தாள். பின், ஷீலாவின் பக்கம் திரும்பி, “ஏங்க உங்களுக்கு இப்படி ஒரு கொலைவெறி..?” என்று கேட்டாள்.

ஷீலா வாய்விட்டுச் சிரித்தாள்.

“ஜெயிச்சா உங்களுக்குப் பரிசா கெடைக்கப்போறது முழுசா ஒரு கிரவுண்டு.. இன்னிக்கு ஒண்ணரைக் கோடிக்கு மேல அதுக்கு மதிப்பு..” என்றாள்.

“ரெண்டு ஜோடியும் இதுல ஜெயிச்சிட்டா..?” என்று கேட்டான், அருண்.

“ரெண்டு ஜோடியும் தோத்துப்போறதுக்கும் வாய்ப்பிருக்குனு மறக்காதீங்க.. எப்படியா இருந்தாலும், பூவா தலையா போட்டு ஜெயிச்சவங்களை முடிவு செய்யலாமா, இன்னொரு போட்டி வெக்கலாமானு நீங்களே சொல்லுங்க..”

“இன்னொரு போட்டிக்கு நாங்க தயார்..” என்றாள், பூர்ணிமா.

“ஐ லவ் யுவர் ஸ்பிரிட்..” என்று ஷீலா உற்சாகப்படுத்தினாள்.

* * *

போட்டி தொடங்கியது.

முதலில் அருண்-பூர்ணிமாவின் போட்டியாளர்களான இன்னொரு ஜோடி தான் அந்த விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

கம்பத்தின் உயரத்திலிருந்து அந்த நாற்காலி தடாலென்று விழுவதுபோல் இறங்கும்போது பார்ப்பவர்களுக்கே கிலிபிடித்தது. பயத்தில், அருணின் கையை பூர்ணிமா இறுகப் பற்றினாள்.

“இப்ப பிடிச்சே சரி.. மேலே போனப்புறம் பிடிச்சுராத..” என்றான், அருண், கவலையோடு.

“நமக்கு ஒரு வசதி. என்ன நடக்குதுனு முதல்லயே பார்த்துட்டோம்.. நாம தயாரா இருக்கலாம்..”

போட்டியாளர்கள் இருவரும் இளைஞர்கள். ஆனாலும், இரண்டாவது முறை விழுகையில் மிரண்டு ஒருவர் கையை ஒருவர் பிடித்து விட்டார்கள். தவறு புரிந்து மூன்றாவது முறை அவர்கள் கவனமாக இருந்தார்கள்.

அவர்கள் இறங்கி, கண்கட்டுகள் பிரிக்கப்பட்ட பிறகும், அவர்கள் முகங்களில் கிலி பாக்கியிருந்தது.

ஷீலா இவர்களைப்பார்த்துத் திரும்பினாள்.

“அந்த ஜோடி ஒரு தடவை தவறு பண்ணிட்டாங்க.. நீங்க ஒரு தடவை கூட பிடிச்சுக்காம இருந்துட்டா, நீங்கதான் ஜெயிச்சவங்க..” என்றாள்.

அருண், பூர்ணிமா இருவரும் கால்கள் பின்னப்பின்ன அந்தக் கம்பத்தை நோக்கி நடந்தார்கள்.

-தொடரும்.

Next Story