தாய்ப்பாலுக்கு எங்கும் தயக்கமில்லை


தாய்ப்பாலுக்கு எங்கும் தயக்கமில்லை
x
தினத்தந்தி 25 March 2018 2:29 PM IST (Updated: 25 March 2018 2:29 PM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்திருக்கவில்லை.. குழந்தையும் பெற்றிருக்கவில்லை.. ஆனாலும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல் வெளிப்படையாக ‘போஸ்’ கொடுத்தவர் பிரபல மாடல் அழகி ஜிலு ஜோசப்.

திருமணம் செய்திருக்கவில்லை.. குழந்தையும் பெற்றிருக்கவில்லை.. ஆனாலும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல் வெளிப்படையாக ‘போஸ்’ கொடுத்தவர் பிரபல மாடல் அழகி ஜிலு ஜோசப். அந்த போட்டோ பிரபல மலையாள இதழான கிரகலட்சுமியின் அட்டைப் படத்தில் வெளியானது. அந்த காட்சி பரபரப்போடு, விவாதத்தையும் உருவாக்கியது. தயக்கமின்றி அப்படி போஸ் கொடுத்த ஜிலு ஜோசப் அது பற்றி அளித்துள்ள பேட்டி:

“நான் குமுளியில் பிறந்து வளர்ந்தேன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ‘எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்?’ என்ற கேள்வி எல்லோரிடமும் கேட்கப்பட்டது. 1999-ம் ஆண்டில், எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது என்னிடமும் அந்த கேள்வி கேட்கப்பட்டது. நான் விமான பணிப்பெண்ணாக ஆசைப்பட்டேன். அந்த வேலையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனாலும் அதில் மோகமாக இருந்தேன். பிளஸ்-டூ படித்துவிட்டு அந்த வேலைக்கு செல்ல ஆசைப்பட்டேன். பெற்றோர் என்னை அந்த விமான பணிப்பெண் வேலைக்கு விட தயங்கினார்கள். நான் என் தந்தையிடம், ‘என்னை ஒரு தடவை நம்புங்கள். மனசாட்சிக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்’ என்றேன்.

எட்டு வருடங்கள் அந்த வேலையை பார்த்தேன். பறந்தேன். பலவிதமான மனிதர்கள், பல்வேறு கலாசாரங்கள், பல பல சம்பவங்கள், உணவுகள்.. எவ்வளவோ நல்ல அனுபவங்கள். விமான பணிப்பெண் வேலை என்பது மகத்துவமும், கவுரவமும் நிறைந்தது என்பதை உணர்ந்தேன். என்னை கவிஞராக அறிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும் அதில் பல கண்ணீர் நிறைந்தது என்ற கவலை எனக்கு உண்டு. எழுத்து எனக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவம். மூன்று கவிதை புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன். சினிமாக்களுக்கு பாடலும் எழுதியுள்ளேன்.

எல்லோரும் அரசாங்க வேலை பெறுவதற்காக படிக்கிறார்கள். வேலை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பின்பு குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். செட்டில் ஆகிவிடுகிறார்கள். இதுதான் சாதாரண பெண்களின் வாழ்க்கை. எனக்கு அப்படி எந்த லேபிளும் இல்லாமல், எல்லாவற்றையும் அறிந்து, எல்லாவற்றையும் படித்து சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறேன்.

எனக்கு கிடைத்த நல்ல ஆண் நண்பர் என் தந்தை. என் விருப்பப்படியே என்னை அங்கீகரித்தவர். பெண் பிள்ளைகளான எங்களிடம் சிரித்து பேசிக்கொண்டே கடந்த ஆண்டு எங்கள் மடியில் உயிர்துறந்தார்.

அன்று நான் ஒரு நீண்ட பயணத்தை முடித்து வந்தேன். அமைதியாக இருந்து ஒரு மெயிலை டைப் செய்தேன். கற்பனை செய்து பார்க்க முடியாத சம்பளம், பெரிய வேலை, சிறந்த அனுபவங்கள் எல்லாம் எனக்கு விமான பணிப்பெண் என்ற வேலை மூலம் கிடைத்தது. ஆனால் ஏதோ ஒன்று எனக்குள்ளே இருந்து என்னை திரும்ப அழைத்துக்கொண்டே இருந்தது. அதனால் எந்த வித திட்டமும் உருவாக்கிக்கொள்ளாமலே நான் வேலையை ராஜினாமா செய்தேன். என்னோடு இருந்த பலரும் அது அறிவில்லாத முடிவு என்றார்கள். ஆனால் நான் கூடுதலாக வாழ்க்கையை பற்றி படிக்க விரும்பினேன். எந்த சங்கிலியும் இல்லாமல் சுதந்திரமாக பயணிக்க விரும்பினேன்.

கடந்த ஆறு மாதங்களாக நான் நிறைய பயணம் செய்கிறேன். பயணங்களுக்காக எனக்கு ‘ஸ்பான்சர்’ செய்யும் நிறுவனங்களுக்கு நான் சோஷியல் மீடியாக்கள் மூலம் தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறேன். இது நம்பிக்கையை பொறுத்த விஷயம். வேலையை விட்ட பின்பு சில சினிமாக்களில் நடித்தேன். படப்பிடிப்பு நடக்கும் எல்லா இடங்களுக்கும் நான் தனியாகத்தான் செல்வேன். எனக்கு எந்த பயமும் கிடையாது. நடிக்க வாய்ப்பில்லாதபோது பயணங்கள் மேற்கொள்வேன். இல்லாவிட்டால் காட்டுக்குள் போவேன். அதுவும் இல்லாவிட்டால் என்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் லட்சத்தீவில் உள்ள சில குடும்பங்களில் போய் சேர்ந்துகொள்வேன். அவர்கள் எனக்கு ஒரு பெரிய கடலையே காட்டுவார்கள். அது ஒரு ஸ்கூபா பேம்லி.

கடலை நினைத்து நான் பயந்துகொண்டுதானிருந்தேன். ஆனால் ஸ்கூபா டைவிங் சென்று லட்சத்தீவு ஆழ் கடலுக்குள் முகம் புதைத்த பின்பு நான் அனுபவித்த சந்தோஷத்தை வார்த்தைகளில் அளவிட முடியாது. ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்களுக்கு மத்தியில் நாமும் நீந்தி சென்று கொண்டிருப்பது அற்புதமானது. குமுளி எனக்கு ரொம்பவும் பிடித்த இடம். நான் அங்கு பிறந்து வளர்ந்தது அதிர்ஷ்டம்.

பயணங்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் படும் அவஸ்தையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். தாய்ப்பால் புகட்டுவது அம்மாக்கள் மட்டுமே உணரக்கூடிய ஆனந்தம். நிலா வெளிச்சத்தில், கடற்கரையில் காற்று வீசும் அற்புதமான தருணத்தில், எதை பற்றியும் கவலைப்படாமல் ஒரு தாய் பால் புகட்டினால் அவர் மனநிலை எப்படி இருக்கும் என்று நான் சிந்தித்துப் பார்த்தேன். தனது வீட்டில் இருந்துகூட ஒரு தாயால் சுதந்திரமாக பாலூட்ட முடிவதில்லை. மூத்த பெண்கள் வந்து போய்க்கொண்டிருந்தால் அவள் ஒரு டவலை போட்டு மூடிக்கொண்டுதான் பால் தருகிறாள். எல்லா தாய்மார் களின் அனுபவமும் இப்படித்தான் இருக்கும்.

முன்பு காதலிப்பது குற்றமாக பார்க்கப்பட்டது. பின்பு அந்த நிலை மாறியது. இப்போது காதலிக்காதவர்கள் யாரும் இல்லை. இது காலத்தால் ஏற்பட்ட மாற்றம். மோசமானதாக கருதப்பட்ட ஒரு விஷயம் காலத்தால் நல்லதாகி விட்டது. அது போன்றதுதான் பால் கொடுப்பதும், மாதவிலக்கும். நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. குழந்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் தாய்ப்பால் விழிப்புணர்வு போட்டோவுக்காக கிரகலட்சுமியில் இருந்து என்னை அழைத்ததும் நான் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக்கொண்டேன். நான் செய்தது சரியானதுதான் என்பது எனக்குத் தெரியும். மற்றவர் களுக்கு பயந்து, ஒரு நல்ல காரியத்தை செய்யாமல் இருந்துவிடக்கூடாது என்று என் மனது சொல்கிறது. இதன் மூலம் எனக்கு கிடைக்கும் கசப்பையும், இனிப்பையும் நான் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு கொண்டாடுவேன். தனது குழந்தைக்கு சகல சுதந்திரத்தோடு பாலூட்ட விரும்பும் எல்லா அம்மாக்களுக்காக- தங்கள் வாழ்க்கையில் மிக அழகான அந்த நிமிடங்களை ஒரு படமாக்கி பாதுகாக்க விரும்பும் தைரியமுள்ள அம்மாக்களுக்காக- இதை நான் செய்திருக்கிறேன்.

மாதவிலக்கு இயற்கையானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் நமது பெண்கள் அதை ஒரு தப்பாக பார்க்கிறார்கள். முதலில் பெண்களின் சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். நேராக கடைக்கு சென்று, ‘அண்ணே ஒரு சானிட்டரி நாப்கின் கொடுங்கள்’ என்று கேட்டு, பேப்பரில் பொதியாமல் அதை வாங்கிக்கொண்டு, கையை வீசிக்கொண்டு நடந்துசெல்லும் தைரியம் வரவேண்டும். பெற்றோர்கள் ‘என்ன உனக்கு இன்னும் மாதவிலக்கு வரவில்லையா?’ என்று மகளிடம் வெளிப்படையாக கேட்கும் சூழ்நிலை உருவாகவேண்டும். இதை எல்லாம் கற்றுக்கொடுக்க நமது பள்ளியில் பாலியல் கல்வி இல்லை.

ஆண், பெண் என்ற பாலின வேற்றுமையை நாம்தான் உருவாக்குகிறோம். இரவில் தனியாக நடந்தால் நமக்கு யாராவது தொல்லை தருவார்கள் என்று நினைத்து நாம் வீட்டுக்குள்ளே ஒளிந்து வாழ்கிறோம். மற்றவர்கள் என்னை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பலமுறை நான் இரவில் தனியாக பஸ்களில் பயணித்திருக்கிறேன். எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. பாதுகாப்பாக நான் பயணித்திருக்கிறேன்.

மற்றவர்களைவிட என்னை நான் அதிகம் நேசிக்கிறேன். முழு உரிமையோடு என் கையில் இருப்பது என் உடல் மட்டும்தான். அதில் ஒரு அங்குலத்தைக்கூட நான் வெறுப்பதில்லை. என் உடலைப் பற்றி எனக்கு எந்த வெட்கமும் இல்லை. கண், மூக்கு, வாய் போன்றுதான் என் உடலில் உள்ள எல்லா உறுப்புகளையும் நான் பார்க்கிறேன். அதனால் தாய்ப்பால் புகட்டுவதை ஒரு பெரிய விஷயமாக் கவேண்டியதில்லை. எல்லோருக்கும் தெரிந்த, தப்பில்லாத ஒரு காரியத்தை செய்ய ஏன் தயங்கவேண்டும்?..” என்ற கேள்வியோடு தன் கருத்தை அழுத்தமாக பதிவு செய்கிறார், ஜிலு ஜோசப்.

Next Story