ஜெயா டி.வி. நிகழ்ச்சி துண்டிப்பு: அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை


ஜெயா டி.வி. நிகழ்ச்சி துண்டிப்பு: அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

உண்ணாவிரத போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்த ஜெயா டி.வி. நிகழ்ச்சி துண்டிக்கப்பட்டதால் தஞ்சை மாவட்ட அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி எடுக்காத மத்திய அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சை திலகர் திடலில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்தது. ஆனால் அரசு கேபிள் டி.வி.யில் இருந்து ஜெயா டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யாமல் தடை செய்யப்பட்டது. இதை அறிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தொண்டர்கள் உண்ணாவிரதம் நடக்கும் இடம் அருகே உள்ள அரசு கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு வந்தனர்.


அரசு கேபிள் டி.வி. அலுவலகம் தஞ்சை காவிரி கூட்டுறவு சிறப்பங்காடியின் மூன்றாவது தளத்தில் உள்ளது. கீழ் தளத்தில் மற்ற கடைகள் இருப்பதால் நேற்று வளாகம் திறந்து இருந்தது. ஆனால் மூன்றாவது தளத்தில் உள்ள கேபிள் டி.வி. அலுவலகத்தின் நுழைவு வாயில் மட்டும் பூட்டப்பட்டு இருந்தது.

இதனால் பூட்டை உடைத்து கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவை உடைக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து காவிரி டெல்டா மக்களின் பிரச்சினைக்காக நடக்கும் உண்ணாவிரத நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்த தமிழக அரசை கண்டிக்கிறோம் என கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து உண்ணாவிரதம் நடக்கும் இடமான திலகர் திடலை சென்றடைந்தனர்.

Next Story