முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது


முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது
x
தினத்தந்தி 26 March 2018 4:00 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டுக்கான திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி புதுக்கோட்டை, கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பூக்களை தட்டுகளில் சுமந்தவாறு சென்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களை கொட்டி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பால்குட ஊர்வலம்

முன்னதாக புதுக்கோட்டை, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், வேல் குத்தியும், கரும்பு தொட்டில் எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர் பின்னர் பாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து 10-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

Next Story