நெல்லையில் சுட்டெரிக்கும் வெயில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்
நெல்லையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒகி புயல் நேரத்தில் பெய்த பலத்த மழையால், அணைகளில் மட்டும் தண்ணீர் பெருகியது. இதனால் ஆற்றுப்பாசன பகுதியில் மட்டும் முழுமையாக நெல் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் வழக்கத்தை விட முன்கூட்டியே கோடை காலம் தொடங்கி விட்டது. சமீபத்தில் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டதால் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வெயில் தனது கோர முகத்தை காட்டியதால் மழை பெய்த சுவடு காணாமல் போய் விட்டது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவானது. நண்பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது, ரோட்டில் அனல் காற்று வீசியது. இதனால் பகல் நேரத்தில் பொது மக்கள் வெளியே அதிகமாக நடமாட முடியாமல், வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பவும், தாகத்தை தணிக்கவும் பொது மக்கள் குளிர்ச்சி தரும் பழங்கள் மற்றும் குளிர் பானங்களை நாடிச்செல்கின்றனர்.
இதையொட்டி தர்பூசணி விலை உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்துக்கு திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்கள் கொண்டு வந்து ஆங்காங்கே குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி தற்போது ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளரி, நுங்கு, பதநீர், கம்பங்கூழ், கேப்பை கூழ், இளநீர் கடைகளும் ஆங்காங்கே சாலையோரங்களில் புதிதாக முளைத்துள்ளன.
பொது மக்கள் இந்த கடைகளுக்கு சென்று இயற்கை பானங்களையும், குளிர்பான கடைகளுக்கு சென்று குளிர்பானங்களையும் அருந்துகின்றனர். இதேபோல் நெல்லை மாவட்டம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் ஆங்காங்கே உள்ள குளிர்பான கடைகளை தேடி மக்கள் செல்கின்றனர்.
Related Tags :
Next Story