ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் விழாமல் இருக்க கம்பிவேலி அமைக்கும் பணி


ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் விழாமல் இருக்க கம்பிவேலி அமைக்கும் பணி
x
தினத்தந்தி 26 March 2018 3:15 AM IST (Updated: 26 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம்-மைலேரிபாளையம் இடையே ரெயில் தண்டவாளம் செல்லும் பகுதியில் பாறைகள் சரிந்து விழாமல் இருக்க கம்பிவேலி அமைக்கும்பணி நடந்து வருகிறது.

கிணத்துக்கடவு,

போத்தனூர் -பொள்ளாச்சி இடையே உள்ள 40 கிலோமீட்டர் தூரம் மீட்டர்கேஜ் ரெயில்பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் மதுரை, பொள்ளாச்சி, கோவை ஆகிய இடங்களுக்கு 3 பயணிகள் ரெயில் மட்டுமே கோவையில் இருந்து கிளம்பி செல்கிறது. மேலும் வருகிற ஏப்ரல் மாதம்முதல் நெல்லை, செங்கோட்டைக்கும் சிறப்பு ரெயில்கள் இந்த வழியாக இயக்கப்பட உள்ளன.இந்த வழித்தடத்தில் அரசம்பாளையம் முதல் மைலேரிபாளையம் வரை 4.5 கிலோமீட்டர் தூரத்தில் தரைமட்டத்தில் இருந்து 20 மீட்டர் பள்ளத்தில் ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தண்டவாளங்கள் பாறைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பகுதியில் ரெயில் வரும்போது மிதமான வேகத்தில்தான் செல்ல வேண்டும்.இந்நிலையில் பள்ளமான பகுதியின் பக்கவாட்டில் பாறைகள் கீழே விழும் நிலையில் அபாயகரமாக இருந்தது. இதனால் பள்ளமான பகுதியில் ரெயில் வரும்போது ரெயிலில் உள்ள பயணிகளுக்கு அச்சத்தை ஏற்ப்படுத்தி வந்தது.

இதனையடுத்து பயணிகளின் அச்சத்தை போக்க ரெயில்வே நிர்வாகம் மையிலேரிபாளையம் முதல் அரசம்பாளையம் இடையே செல்லும் ரெயில்பாதையின் பக்கவாட்டில் பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழாத வகையில் தடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல்கட்டமாக ரெயில்வே தண்டவாளம் அருகில் உள்ள பாறைகளில் இருந்து அபாயகரமாக அந்தரத்தில் நின்ற பாறைகள் அகற்றப்பட்டன. இந்த பணிகள் 2 மாதங்களாக நடைபெற்று முடிந்தது.

இதனை தொடர்ந்து அரசம்பாளையம்பகுதியில் தரைமட்டத்தில் இருந்து 60அடி உயரத்தில் உள்ளபாறைகளின்மீது கம்பிவேலி அமைக்கும்பணி தொடங்கியது. இந்தபணியில் 20-க்கும் மேற்பட்டோர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து ரெயில்வேஅதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.6 கோடி செலவில் பாறைகள் மீது கம்பிவேலி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கம்பிவேலி அதிக பள்ளமானபகுதியில் பாறைகளுக்கு இடையே தண்டவாளங்கள் அமைந்துள்ளபகுதியில்மட்டுமே அமைக்கப்படுகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கம்பிவேலி அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை ஜூன் மாதம் இறுதிக்குள்முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பிவேலி பொருத்தும் பணிகள் நடைபெற்றாலும், இந்தவழித்தடத்தில் வழக்கமான ரெயில்சேவை நடைபெறும்.

கம்பிவேலி முழுமையாக பொருத்தப்பட்டபிறகு இந்த பகுதியில் ரெயில்களின்வேகம் அதிகரிக்கப்படும். தற்போது போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில்வே வழித்தடம் மின்ழித்தடமாக மாற்றவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறன்றன.மேலும் இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் ரெயில்வேதுறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story