போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற பெண் மீது தாக்குதல்


போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற பெண் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 26 March 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணை தாக்கியதில் மயக்கம் அடைந்தார்.

திருவண்ணாமலை,

கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணை தாக்கியதில் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கீழ்பென்னாத்தூர் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், விவசாயி. இவரது மனைவி சுகந்தி. ஆறுமுகத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ மனைவி ராணி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ராணி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று காலை ஆறுமுகத்தை கைது செய்வதற்காக ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது ஆறுமுகம் வீட்டில் இல்லை. இதையடுத்து ஆறுமுகத்தின் மனைவி சுகந்தியை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர். போலீஸ் நிலையத்தில் வைத்து சுகந்தி, எனது கணவர் மீது புகார் செய்யப்பட்டால் அவரை தானே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வர வேண்டும். என்னை ஏன் அழைத்து வந்தீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டரும், அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவரும் சேர்ந்து சுகந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுகந்தி மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து போலீசார், அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். சுகந்தி மயங்கி விழுந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த கீழ்பென்னாத்தூர் போலீசார், சுகந்தி மயங்கி விழுந்ததால் ஆட்டோவில் அழைத்து வந்ததாக கூறினர்.

இதை கேட்டு கொண்டிருந்த சுகந்தி, தன்னை போலீசார் தாக்கியதால் தான் மயங்கினேன் என்று டாக்டர்களிடம் தெரிவித்தார். மேலும் சுகந்தி இன்று (திங்கட்கிழமை) திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறினார்.

Next Story