குழாய்களில் உடைப்பு: அதிகாரிகளின் மெத்தனத்தால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி


குழாய்களில் உடைப்பு: அதிகாரிகளின் மெத்தனத்தால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 26 March 2018 3:15 AM IST (Updated: 26 March 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பல இடங்களில் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மெத்தனத்தால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் பொதுமக்களின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்துவருகிறது. இதற்காக சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் சீராக வினியோகம் செய்ய கிராம பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் வால்வுகள் பொருத்தப்பட்டு உள்ளன. குழாய்களில் குடிநீர் வரும்போது பல இடங்களில் வால்வுகள், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. சில இடங்களில் பொதுமக்களே குழாயில் துளையிட்டு தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் மண்டபம், வழுதூர், பார்த்திபனூர், முதுகுளத்தூர், பரமக்குடி, நயினார்கோவில், கொடிகுளம், சக்கரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாவது வழக்கமாக உள்ளது. இதுதவிர சாலையோரங்களில் அடிக்கடி ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை உடைத்து அருகில் உள்ள வயல், ஊருணிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். ஒரு சிலர் தொட்டியின் அருகிலேயே குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வது கிடையாது. ஏற்கனவே காவிரிகூட்டுக் குடிநீர் பற்றாக்குறையால் நகர், கிராம பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதால் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்து வருகிறது.

ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சிகளில் 3 நாள் முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. மண்டபம் பேரூராட்சியில் 5 நாள் முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் குடிநீரை குடம் ஒன்றுக்கு ரூ.10 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிஉள்ளது.

மாவட்டத்தில் குழாய்களை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது:- கிராமங்களுக்கு முறையாக குடிநீர் வருவது கிடையாது. பல மாதங்களாக குடிநீர் இல்லாமல் சிரமம் அடைந்து வருகிறோம். குடிநீர் தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. குடிநீர் கிடைக்காமல் சாலையோரத்தில் தேங்கும் நீரை சேகரித்து குடித்து வருகிறோம். குடிநீர் கலங்கலாகவும், அசுத்தமாகவும் உள்ளதால் தொற்று நோய் பரவி வருகிறது.

இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் பாதிப்படைகின்றனர். வேறு வழியில்லாமல் சில இடங்களில் நாங்களே குழாயை உடைத்து தண்ணீர் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதிகாரிகள் மெத்தனத்தால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். முறையாக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story