ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழுதுபார்த்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் கணவன்-மனைவி உள்பட 5 பேர் உடல் கருகினர்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழுதுபார்த்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் கணவன்-மனைவி உள்பட 5 பேர் உடல் கருகினர்
x
தினத்தந்தி 26 March 2018 3:15 AM IST (Updated: 26 March 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பழுதான சமையல் கியாஸ் சிலிண்டரை பழுது பார்த்தபோது வெடித்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் கணவன்-மனைவி உள்பட 5 பேர் உடல் கருகினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் சங்கரநாராயணன்தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது47). கூலித்தொழிலாளி. இவரது வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டரில் பழுது ஏற்பட்டது. இது குறித்து அங்குள்ள கியாஸ் ஏஜென்சிக்கு அவர் தகவல் கொடுத்தார். அங்குள்ள ஊழியர் செல்வராஜ்(43) சிலிண்டரை சரிசெய்ய வீட்டுக்கு வந்தார்.

சிலிண்டரை பழுதுபார்க்க சோதனை செய்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்து தீப்பிடித்தது. இதில் செல்வராஜ் மற்றும் பாஸ்கரன், அவரது மனைவி லட்சுமி(41) ஆகியோர் உடல் கருகினர். சத்தம் வந்ததை கேட்டு பாஸ்கரனின் உறவினர்கள் அங்கு வந்தனர். இதில் அம்மையப்பன்(45), முருகன்(43) ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. 5 பேர் உடல் கருகியதோடு பாஸ்கரன் வீட்டிலிருந்த பொருட்களும் நாசமாயின.

தகவல் அறிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். உடல் கருகிய செல்வராஜ் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அம்மையப்பன், முருகன் ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையிலும் பாஸ்கரன், லட்சுமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story