தமிழகம் முழுவதும் லோக் அயுக்தா நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும், அர்ஜுன்சம்பத் பேட்டி


தமிழகம் முழுவதும் லோக் அயுக்தா நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும், அர்ஜுன்சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 26 March 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் லோக் அயுக்தா நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

கொடைக்கானல்,

இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரத்தில் நடந்தது. இதற்கு நிறுவன தலைவர் அர்ஜுன்சம்பத் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிபாலன், மாநில செயலாளர் செந்தில்குமார், மாநில அமைப்பாளர் செந்தூர் செல்வம், செயலாளர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அர்ஜுன்சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் என்பது காந்தி கண்ட ராமராஜ்ஜியம் ஆகும். இதற்காக அவரது ரசிகர்கள் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வேண்டும். லோக் அயுக்தா நீதிமன்றங்களை தமிழகம் முழுவதும் உடனடியாக அமைக்க வேண்டும். பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கட்சிகள் ஆட்சி அமைக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் இந்து மக்கள் கட்சி தமிழகத்தில் ராமராஜ்ஜியத்தை அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பா.ஜனதா கட்சி உறுதி மொழி அளித்து வெற்றி பெற்று 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை கட்டாமல் இருப்பது இந்துகளை ஏமாற்றும் செயலாகும். எனவே சிறப்பு சட்டம் இயற்றி ராமர் கோவில் கட்ட வேண்டும்.

தமிழ் புத்தாண்டை நெசவாளர் புத்தாண்டாக அறிவித்து, கைத்தறி நெசவு தொழிலை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் கைத்தறி துணிகளை வாங்க பொதுமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தினை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி நதிநீர் இணைப்பு திட்டத்தினை நிறைவேற்றுவதுடன் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

கொடைக்கானல் பகுதிகளில் நடைபெறும் மரக்கடத்தலை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் குமரன், மேற்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ், நகர தலைவர் கார்த்திக், பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், அமைப்பாளர் ஆனந்தன் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் சக்திதரன் நன்றி கூறினார். 

Next Story