7 ஆண்டுகளுக்கு பிறகு சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை
7 ஆண்டுகளுக்கு பிறகு சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் கடந்த 1993-ம் ஆண்டு விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு நிறுவனங்கள் மூலம் சென்னை-சேலம் இடையே விமான சேவை தொடங்கியது. ஆனால் போதிய அளவில் வருமானம் இல்லாததாலும், கட்டணம் அதிகமாக இருந்ததாலும் மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்தது. இதனால் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் விமான சேவை 2010-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் சேலம் விமான நிலையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 7 ஆண்டுகளுக்கு பிறகு ‘ட்ரூஜெட்‘ நிறுவனம் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடக்க விழா சேலம் விமான நிலையத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணிக்கு சேலத்துக்கு வந்தார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன் மற்றும் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், இல.கணேசன் எம்.பி., தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட மத்திய அரசின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகளும் வந்தனர்.
பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், சுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், வெற்றிவேல், சக்திவேல், மனோன்மணி, சித்ரா, ராஜா, மருதமுத்து, சின்னதம்பி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைவரையும் வரவேற்றார். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் ராஜீவ் நயன் சவுபே திட்ட விளக்கரை ஆற்றினார்.
விமான சேவை மிகவும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. அது ஏழை எளிய-மக்களுக்கு எட்டாத கனியாக இருந்தது. இதனை அவர்களுக்கு எட்டச் செய்யும் வகையில் குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சிறு நகரங்களை பெருநகரங்களுடன் இணைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு 21.10.2016-ல் மண்டலங்களுக்கு இடையேயான விமான போக்குவரத்து உதான் திட்டம் மூலம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டிலுள்ள சிறு நகரங்களில் விமான சேவை தொடங்குவதற்காக 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டிலுள்ள சேலம் மற்றும் நெய்வேலி ஆகிய இடங்களை தேர்வு செய்து, விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி சேலத்தில் முதன் முதலாக இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை இயக்குவதற்காக 20 சதவீதம் கடன் ஈட்டு தொகையையும் தமிழக அரசு வழங்க உள்ளது. இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கப்படுவதால் சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்க முடியும். சேலத்தில் விமான சேவை தொடங்கியதன் மூலம் ஈரோடு, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழில் வளம் பெருகுவதோடு வணிகர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இன்றைக்கு மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மாநில அரசுக்கு தேவையான திட்டங்கள், நன்மைகள் கிடைக்கும்.
வீடுகள் கட்டுகின்ற திட்டத்தில், தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் வீடுகள் வேண்டுமானாலும் ஏழை மக்களுக்கு தருகிறோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். இதனால், வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்றார்கள். மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளதால் இந்த திட்டத்தின் மூலமாக ஏழை மக்களுக்கு தேவையான வீடுகள் கிடைக்கின்றன.
அதேபோல், தொழில்வளம் பெருக வேண்டுமென்று சொன்னால், இன்றைக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியம். அந்த உட்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தினால்தான், தொழில் வளம் பெருகும். ஆகவே, உட்கட்டமைப்பு வசதிகளை இன்றைக்கு அதிக அளவிலே தமிழகத்திலே உருவாக்குவதற்கு மத்திய அரசு துணை நிற்கின்றது.
சேலத்தில் இருந்து சென்னை வரை 6 வழி பசுமை சாலைகள் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பயண நேரம் 6 மணியில் இருந்து 3 மணி நேரமாக குறையும். நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவில் இருந்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, காக்காபாளையம், இளம்பிள்ளை, கே.ஆர்.தோப்பூர், முத்துநாயக்கன்பட்டி வழியாக ஓமலூர் வரை அந்த புறவழிச்சாலை வந்து இணைகிறது. சுமார் 42 கிலோமீட்டரில் அந்த சாலை அமைகிறது. அவ்வாறு புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு சூழ்நிலையை நாம் உருவாக்க முடியும்.
ஆகவே, இன்றைக்கு உட்கட்டமைப்பு வசதிகள் அதிகமாக நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் புதிய தொழில்கள் தமிழகத்திலே வருவதற்கு பல்வேறு தொழில் அதிபர்கள் நம்மோடு தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் ஏற்றுமதியை ஊக்குவிக்கிற விதத்திலே, இன்றைக்கு கப்பல் போக்குவரத்து மிக முக்கியம். தூத்துக்குடியிலே கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் ஒரு துறைமுகம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கு தமிழக அரசு முழுஒத்துழைப்பு கொடுக்கும்.
தொழில்வளம் பெருகினால் தான், வேலைவாய்ப்பை பெருக்க முடியும். புதிய, புதிய தொழில்கள் வருவதன் மூலமாக, படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரமுடியும்.
ஓசூர், கோவை, சேலம் போன்ற பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு தேவையான உதிரிபாகங்கள் அமைக்கக்கூடிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். புதிய தொழிற்சாலை வந்தால் படித்த, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னதாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு, டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட்டதை பாராட்டி பேசினார். முன்னதாக விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆதரவற்ற குழந்தைகள் 2 பேருக்கு விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட்டை வழங்கினார்.
விமான சேவை தொடக்க விழாவில், காடையாம்பட்டி ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் சித்தேஸ்வரன், மாவட்ட இணைச்செயலாளர் ஈஸ்வரி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராணிசேகர், வக்கீல் செல்லதுரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் பூலாம்பட்டி பாலு, செயலாளர் வையாபுரி, பொருளாளர் இளங்கோ, துணைத்தலைவர் ரவி, துணை செயலாளர் செல்வம், அட்மா திட்டக்குழு தலைவர் கரட்டூர் மணி, எடப்பாடி நகர்மன்ற முன்னாள் தலைவர் கதிரேசன், அனுப்பூர் தங்கரத்தினம், சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, சேலம் ஒன்றிய செயலாளர் டி.என்.வையாபுரி, மாமாங்கம் ஏ.செங்கோட்டையன், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச்செயலாளர் ஜான்கென்னடி, சூரமங்கலம் பகுதி அவைத்தலைவர் கிருபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story