பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது: கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்


பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது: கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்
x
தினத்தந்தி 26 March 2018 5:15 AM IST (Updated: 26 March 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று கூடுகிறது. கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார். கவர்னர் உரை முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.

கடந்த முறை என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அப்போதைய முதல்- அமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். அதுவே தற்போதும் நடை முறையில் இருந்து வருகிறது.

அதாவது, மார்ச் மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன்பின் சில மாதங்கள் கழித்து முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது புதுச்சேரியில் வழக்கமாகி விட்டது.

அந்த வகையில் புதுவை சட்டசபை இன்று (திங்கட் கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இன்றைய கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி உரையாற்றுகிறார்.

சட்டசபையில் உரையாற்றுவதற்காக கவர்னர் கிரண்பெடி இன்று காலை 9.25 மணிக்கு காரில் சட்டசபைக்கு வருகிறார். அவருக்கு சட்டசபை வளாகத்தில் போலீஸ் மரியாதை அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் கவர்னர் கிரண்பெடியை பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்ற அழைத்துச் செல்வார்.

கூட்ட அரங்கிற்குள் வரும் கவர்னர் நேராக சபாநாயகரின் இருக்கைக்கு சென்று ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அது முடிந்ததும் அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் படிப்பார். இந்த நிகழ்ச்சிகளுக்குப்பின் கவர்னர் சட்டசபையில் இருந்து விடைபெற்று செல்வார்.

அதன்பின் அடுத்த 3 மாதங்களுக்கான (ஏப்ரல், மே, ஜூன்) அரசின் செலவினங்களுக்காக முன்அனுமதிகோரி இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார். அத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.

தொடர்ந்து நாளை, நாளை மறுதினம் (செவ்வாய், புதன்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. இந்த விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசுகிறார். அதன்பின் சட்டசபை ஒத்திவைக்கப்படும்.

காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள போதிலும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாதது, நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்து அவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்குமாறு ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை இன்று கூடுகிறது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்களான பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரது நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அவர்களும் இன்று சட்டசபைக்கு வருவார்கள். அவர்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதிக்கமாட்டார் என்று தெரிகிறது. இருந்தாலும் சட்டசபை வளாகத்திற்குள் வந்து அவர்கள் பிரச்சினை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை மட்டுமின்றி மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. எனவே புதுச்சேரி சட்டசபை கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. 

Next Story