பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அரசு இசைப்பள்ளி விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அரசு இசைப்பள்ளி விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசினார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் 21-வது ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா பாளையங்கோட்டை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் 34 பேருக்கு ரூ.2.41 லட்சம் மதிப்பிலான நாதசுரம், பரதநாட்டிய ஒப்பனைப் பொருட்கள், தம்புராமின் சுருதி பெட்டி, குழித்தாளம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசை கருவிகளை வழங்கினார்.
நெல்லை மாவட்ட அரசு இசைப்பள்ளி சிறப்பு வாய்ந்த பயிற்சி மையம் ஆகும். இங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் குற்றால சாரல் விழா, புத்தக திருவிழா உள்ளிட்ட பல்வேறு அரசு விழாக்களில் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி உள்ளனர். பாரம்பரிய கலைகள் தான் நமது கலாசாரத்தின் அடையாளம் ஆகும். வருங்கால சந்ததியினருக்கு நமது கலைகளை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு சிறப்பாக கலைகளை கற்றுக் கொண்டு, அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அரசு இசைப்பள்ளிக்கு தேவையான கூடுதல் வசதிகளை அரசு மூலம் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
விழாவில் அருங்காட்சியக காப்பாட்சியர் சத்தியவள்ளி, இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாம செல்வி, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் சொக்கலிங்கம் மற்றும் இசைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story