மல்லபுரத்துக்கு ஜெர்மன் நாட்டு அதிபர் வருகை புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தார்


மல்லபுரத்துக்கு ஜெர்மன் நாட்டு அதிபர் வருகை புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தார்
x
தினத்தந்தி 27 March 2018 5:15 AM IST (Updated: 27 March 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்துக்கு ஜெர்மன் நாட்டு அதிபர் நேற்று வருகை தந்தார். அவர் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்தார்.

மாமல்லபுரம்,

சென்னைக்கு 2 நாள் அரசு முறைப்பயணமாக வருகை தந்துள்ள ஜெர்மன் நாட்டு அதிபர் பிரான்க் வால்டர் ஸ்டைன்மையர், தனது மனைவி எல்கே புடன்பென்டருடன் நேற்று காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு வருகை தந்தார். அங்குள்ள கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு ஆகிய இடங்களில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்தார்.

அவருக்கு தொல்லியல் துறை அதிகாரிகள் பல்லவர் கால சிற்பங்களின் தன்மை, அதன் வரலாறுகள் குறித்து விளக்கி கூறினர். அதை அவர் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு சிற்பங்களையும் ஊர்ந்து பார்த்து வியந்தார்.

முன்னதாக கடற்கரை கோவில் நுழைவு வாயில் அருகில் மாவட்ட கலெக்டர் பொன்னையா, சப்-கலெக்டர் ஜெயசீலன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகாநாத்சிங் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

ஜெர்மன் நாட்டு அதிபருடன் அந்த நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் உடன் வந்திருந்தனர்.

ஜெர்மன் நாட்டு அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு கருதி போலீசார் அதிக கெடுபிடி செய்தனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்புராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையொட்டி நேற்று காலை 9 மணி முதல் தெருக்களில் மோட்டார் சைக்கிள்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. கடற்கரை சாலையில் கடைகளை திறக்கவும் போலீசார் அனுமதிக்காததால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தெருக்களில் 20 அடிக்கு ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாதாரண உடை அணிந்த போலீசாரும் மலைக்குன்றின் மேல் நின்று ‘பைனாக்குலர்’ மூலம் கண்காணித்தனர். பத்திரிகையாளர்களும் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

ஜெர்மன் நாட்டு அதிபர் வந்து செல்லும் வரையில் புராதன சின்னங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நேற்று மாமல்லபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல் காணப்பட்டது.

போலீசாரின் கெடுபிடியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று முற்றிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

Next Story