விருத்தாசலம் அருகே ஜாமீனில் வந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை, காதலி இறந்த அதே இடத்தில் சோக முடிவு


விருத்தாசலம் அருகே ஜாமீனில் வந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை, காதலி இறந்த அதே இடத்தில் சோக முடிவு
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ஜாமீனில் வந்த வாலிபர் காதலி இறந்த அதே இடத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுவிளாங்குளத்தை சேர்ந்தவர் ஜெயவேல் மகன் வீரச்செல்வன் (வயது 21). இவரும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகள் சசிகலா(20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இவர்களது காதலுக்கு சசிகலாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சசிகலாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதில் மனமுடைந்த சசிகலா கடந்த நவம்பர் மாதம் விஜயமாநகரத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த சசிகலாவின் தந்தை செல்வராஜ், விருத்தாசலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி வீரச்செல்வனை கைது செய்தனர்.

கடலூர் மத்திய சிறையில் இருந்த வீரச்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் காதலி இறந்த மன வேதனையில் உறவினர்கள் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சசிகலா தற்கொலை செய்து கொண்ட அதே இடத்துக்கு நேற்று அதிகாலையில் வீரச்செல்வன் சென்றார். பின்னர் அவர் அந்த வழியாக வந்த ஒரு ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட வீரச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீனில் வந்த வாலிபர் காதலி இறந்த அதே இடத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story