விஷம் குடித்து விட்டு மனு கொடுக்க வந்தார்: நீதிபதி முன்பு மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு


விஷம் குடித்து விட்டு மனு கொடுக்க வந்தார்: நீதிபதி முன்பு மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 March 2018 4:30 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் விஷம் குடித்து விட்டு மனு கொடுக்க வந்த பெண், நீதிபதி முன்பு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் மேல்பிரிவு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வருபவர் முருகானந்தவள்ளி (வயது 35). இவர் நேற்று வால்பாறையில் உள்ள நீதித் துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர், என்னை யாரோ ஒருவர் செல்போனில் அழைத்து அடிக்கடி மிரட்டுகிறார். இது குறித்து ஏற்கனவே போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.

ஆகவே இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் விஷம் குடித்துவிட்டு வந்து தான் இந்த மனுவை அளிக்கிறேன் என்று கூறி நீதிபதியிடம் மனுவை கொடுத்தார். பின்னர் அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே நீதிபதி ஆறுமுகம், அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டார். ஊழியர்கள் அந்த பெண்ணை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் முருகானந்த வள்ளி சாணிப்பவுடரை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முன்னதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முருகானந்தவள்ளியை நீதிபதி நேரில் சென்று பார்த்து விசாரித்தார். அவர் கொடுத்த மனுமீது விசாரணை நடத்தவேண்டும் என்று வால்பாறை போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story