வருவாய்த்துறை பணியிட மாறுதலில் பொது கலந்தாய்வு முறையை அமல்படுத்த கோரிக்கை


வருவாய்த்துறை பணியிட மாறுதலில் பொது கலந்தாய்வு முறையை அமல்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 27 March 2018 3:30 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறையில் உள்ள அனைத்து நிலை மாறுதலில் பொது கலந்தாய்வு முறையை அமல்படுத்த வேண்டும் என்று குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை,

தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகேந்திரமுருகன், மாவட்ட துணைத்தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்புச் செயலாளர் இளங்கோ விளக்கவுரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கமரூதீன், ராமநாதன், ராஜசேகர், சுதா, பாரதி, தனபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வருவாய்த்துறையில் காலியாகவுள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை தகுதியானவர்களை கொண்டு நிரப்பிட அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளர், துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு புதிய பணியிடத்தை உருவாக்க வேண்டும்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரியும் நேரடி நியமன வருவாய் உதவியாளர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் வருவாய்த்துறை அனைத்து நிலை பணியிட மாறுதலில் பொது கலந்தாய்வு முறையை அமல்படுத்த வேண்டும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அ1, அ2 இருக்கையில் வருவாய் ஆய்வாளர் முடித்த முதுநிலையில் உள்ள வருவாய் உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story