குடிநீர் முறையாக வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்


குடிநீர் முறையாக வழங்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 March 2018 3:30 AM IST (Updated: 27 March 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் முறையாக வழங்கக்கோரி சருகுவலையபட்டி, தனக்கன்குளம், பொய்கைகரைப்பட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

மேலூர்,

மேலூர் அருகே உள்ள சருகுவலையபட்டியில் நிலத்தடிநீர் வற்றிப்போனதால் பொது வினியோக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை சமாளிக்க காவிரி கூட்டு குடிநீர் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. அந்த குடிநீரும் கடந்த ஒரு மாதமாக வழங்கப்படவில்லை. இதனையடுத்து கிராம மக்கள் குடிநீருக்காக கடும் அவதியடைந்து வந்தனர்.

இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் சருகுவலையபட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறையாக காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லையெனில் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கலைந்து சென்றனர்.

இதேபோல திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகர் பகுதி மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் அந்த பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வசதி செய் வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சோனாபாய், முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் போர்க்கால அடிப்படையில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மதுரையை அடுத்த கள்ளந்திரி பகுதி பொய்கைகரைப்பட்டியில் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததால், அந்த கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்தும் தண்ணீர் கிடைக்காததால், கிராம மக்கள் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் சிரமமப்படுகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பல முறை தெரிவித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அந்த கிராம மக்கள் ஒன்று கூடி நாளை (புதன்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். 

Next Story