தீவிர அரசியலில் ஈடுபடுவது எப்போது? நடிகை ரம்யா பதில்


தீவிர அரசியலில் ஈடுபடுவது எப்போது? நடிகை ரம்யா பதில்
x
தினத்தந்தி 27 March 2018 4:15 AM IST (Updated: 27 March 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

தீவிர அரசியலில் ஈடுபடுவது எப்போது என்பது குறித்து நடிகை ரம்யா பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்யா. இவர், தமிழில் நடிகர் சூர்யா, தனுஷ் ஆகியோருடன் நடித்துள்ளார். நடிகை ரம்யா திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் மண்டியா தொகுதியின் எம்.பி.யாகவும் அவர் இருந்துள்ளார். பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் நடிகை ரம்யா இருந்தார். தற்போது அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் சமூக வலைதள பிரிவு தலைவராக இருந்து வருகிறார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார். மேலும் மைசூரு, மண்டியா மாவட்டங்களில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட நடிகை ரம்யா கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், நடிகை ரம்யா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா?, கர்நாடக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது ஏன்?, தீவிர அரசியலில் ஈடுபடுவது எப்போது? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து நடிகை ரம்யா கூறியதாவது:-

தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கர்நாடக அரசியலில் தீவிரமாக ஈடுபடவும் விரும்பவில்லை. தற்போது நான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு பொறுப்பில் இருந்து வருகிறேன். அதில், பணியாற்றுவதே மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. சமூக வலைதளம் மூலம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பற்றி மக்களிடம் தெரிவித்து வருகிறேன். கர்நாடக சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் குறித்து சமூக வலைதளம் மூலமாக மக்களுக்கு தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story