தனியார் விடுதியில் மர்மச்சாவு: இறந்து கிடந்த பெண்ணுடன் தங்கிய 2 பேர் யார்?


தனியார் விடுதியில் மர்மச்சாவு: இறந்து கிடந்த பெண்ணுடன் தங்கிய 2 பேர் யார்?
x
தினத்தந்தி 27 March 2018 5:15 AM IST (Updated: 27 March 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

தனியார் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணுடன் தங்கி இருந்த 2 பேர் யார்? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் எதிரே பக்தர்கள் தங்கும் தனியார் விடுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது காது, மூக்கு, வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வழிந்து இருந்தது. கழுத்து பகுதியில் காயம் காணப்பட்டது.

இறந்து கிடந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த பெண்ணுடன் வயதான ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வந்து வெள்ளிக்கிழமை இரவு அந்த விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். சனிக்கிழமை காலை சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டு செல்வோம் என்று விடுதியில் கூறி உள்ளனர் என்பது தெரிந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இந்தநிலையில் சனிக்கிழமை மாலையில் அந்த பெண், மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். ஆனால் அவருடன் வந்த ஆண் மற்றும் பெண் இருவரையும் காணவில்லை. அவர்கள் 2 பேரும் யார்?, இவர்கள் 3 பேருக்கும் என்ன சம்பந்தம்?, எதற்காக அந்த பெண்ணுடன் வந்து தங்கினர்? என்பது தெரியவில்லை.

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இறந்து கிடந்த பெண்ணுடன் வந்து தங்கி இருந்த வயதான ஆண் மற்றும் பெண்ணின் உருவம் பதிவாகி உள்ளது.

அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அவர்கள் இருவரும் யார்?, இறந்த பெண்ணுக்கு அவர்கள் மாமியார்-மாமனாரா?, தாய்-தந்தையரா? அல்லது உறவினர்களா? என்பது உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். 

Next Story