கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?


கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?
x
தினத்தந்தி 27 March 2018 4:30 AM IST (Updated: 27 March 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி முடிவடைகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது. கர்நாடகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சென்றார்.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் தலைமை தேர்தல் கமிஷனர் ஓம்பிரகாஷ் ராவத் பெங்களூருவுக்கு வந்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இருந்தார். ஆனால் அவருடைய பெங்களூரு வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அவருடைய தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

மேலும், இந்த கூட்டம் முடிந்த பிறகு, கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை இன்றே அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், கர்நாடகத்தில் இன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். இதனால் வளர்ச்சி திட்டப்பணிகள் எதுவும் மேற்கொள்ள முடியாது. இன்று மாலை பெங்களூருவில் மந்திரி சபை கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அந்த கூட்டமும் ரத்து செய்யப்படும்.

Next Story