பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி


பழம்பெரும் நடிகை ஜெயந்தி மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 27 March 2018 3:45 AM IST (Updated: 27 March 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

பழம்பெரும் நடிகை ஜெயந்தி மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பழம்பெரும் நடிகையாக இருந்து வருபவர் ஜெயந்தி (வயது 73). இவர், கன்னடம் தவிர தமிழ், மலையாளம், இந்தி, மராட்டி மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமாருடன் மட்டும் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை ஜெயந்தி நடித்து பிரபலமானவர். அவர் தனது மகன் கிருஷ்ணகுமாருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று காலையில் நடிகை ஜெயந்திக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனது தாயை கன்னிங்காம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணகுமார் அனுமதித்தார். அங்கு அவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு மூச்சுத்திணறால் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் நடிகை ஜெயந்தி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை ஜெயந்திக்கு ஆஸ்துமா இருப்பதும், இதற்காக அவர் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்து உள்ளது. இதற்கிடையில், நடிகை ஜெயந்தியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை குறித்து இன்னும் 24 மணிநேரத்திற்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் மருத்துவமனையின் டாக்டர் சதீஸ் தெரிவித்து உள்ளார்.

நடிகை ஜெயந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்ததும் நடிகைகள் சரோஜாதேவி, பாரதி விஷ்ணுவர்தன், தாரா ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது மகன் கிருஷ்ணகுமாரிடம் நலம் விசாரித்தனர். மேலும் கன்னட திரை யுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மருத்துவ மனைக்கு சென்று ஜெயந்தியின் உடல் நலம் பற்றி அவரது மகனிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story