வாலிபர் குத்திக்கொலை காதலியின் அண்ணனிடம் விசாரணை


வாலிபர் குத்திக்கொலை காதலியின் அண்ணனிடம் விசாரணை
x
தினத்தந்தி 27 March 2018 5:11 AM IST (Updated: 27 March 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

பாண்டுப்பில் கொலைவழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது காதலியின் அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மும்பை பாண்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோவில் வாலிபர் ஒருவர் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த பாண்டுப் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவரது பெயர் நரேஷ் ஷெட்டி (வயது20) என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

நரேஷ் ஷெட்டி பாண்டுப் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கு தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அந்த இளம்பெண் நரேஷ் ஷெட்டி உடனான காதலை துண்டித்தார்.

அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் இது இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. கடந்த சனிக்கிழமை அன்று இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று திருமணத்துக்கு சம்மதிக்கும்படி இளம்பெண்ணிடம் அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

எனவே சந்தேகத்தின் பேரில் போலீசார் இளம்பெண்ணின் அண்ணனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story