நதிப்பாலத்தில் பெண்கள் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு பொதுமக்களிடையே நல்ல மவுசு


நதிப்பாலத்தில் பெண்கள் பிடித்து வரும் இறால் மீன்களுக்கு பொதுமக்களிடையே நல்ல மவுசு
x
தினத்தந்தி 28 March 2018 3:15 AM IST (Updated: 28 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் நதிப்பாலம் பகுதியில் பிடிபடும் இறால் மீன்களுக்கு பொதுமக்களிடையே நல்ல மவுசு உள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் ஆற்று தண்ணீரில் அமர்ந்து மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

பனைக்குளம்,

பனைக்குளம்-அழகன்குளம் செல்லும் சாலையில் நதிப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் வைகை ஆறு கடந்து சென்று ஆற்றாங்கரை என்னும் இடத்தில் வங்கக் கடலுடன் சங்கமிக்கிறது. மழைக்காலத்தில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவிலான தண்ணீர் சென்று கடலில் கலப்பது வழக்கம். இருப்பினும் முகத்துவாரம் என்பதால் இந்த பாலத்தின் கீழ் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இதில் அழகன்குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் மீன்பிடித்து அந்த பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தண்ணீருக்குள் இறங்கி தரையில் அமர்ந்தபடி துணிகள் மற்றும் வெறும் கைகளாலேயே இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை பிடித்து வருகின்றனர்.

ஆற்றில் பிடிபடும் இறால் மீன்கள் அதிக ருசியாக இருப்பதன் காரணமாக கிராமப்புறங்களில் இத்தகைய மீன்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் பேரம்பேசாமல் இந்த மீன்களை வாங்கிச்செல்கின்றனர். இத்தகைய மீன்பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் தண்ணீருக்குள் அமர்ந்து கைகளால் மீன்பிடிப்பதை அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர்.

Next Story