நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வீச்சு 5 பேர் கைது


நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வீச்சு 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2018 3:15 AM IST (Updated: 28 March 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வீசப்பட்டது தொடர்பாக முன்னாள் நகர் மன்ற தலைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு ரைட்டர்ஸ் சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, அப் பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது, ரைட்டர்ஸ் சாலையில் தேங்கி இருந்த கழிவுநீரை வாளிகளில் பிடித்து எடுத்து வந்திருந்த பொதுமக்கள், அதனை நகராட்சி கமிஷனரின் அறை முன்பும், அலுவலகத்தின் பிற பகுதி களிலும் ஊற்றி தங்களின் எதிர்ப்பை தெரியப்படுத்தினர்.

அதன் பின்னரும் நகராட்சி கமிஷனர் புகார் மனுவை ஏற்க மறுத்துவிட்டதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பூந்தமல்லி டிரங்க் சாலையின் இருபுறமும் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, பொதுமக்களின் முற்றுகை போராட்டம் மற்றும் சாலை மறியல் குறித்தும், நகராட்சி அலுவலக வளாகத்தில் கழிவு நீர் ஊற்றியது தொடர்பாகவும் நகராட்சி கமிஷனர் சித்ரா, பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போராட்டத்துக்கு தலைமை தாங்கிய முன்னாள் நகர் மன்ற தலைவர் பூவை ஞானம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கந்தன் மற்றும் சாதிக் பாட்ஷா, காதர், தமிழ்மாறன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது, அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது, ஆபாசமாக பேசுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

Next Story