திருமதி இந்தியா அழகிக்கான இறுதி போட்டிக்கு ஊட்டி பெண் தேர்வு


திருமதி இந்தியா அழகிக்கான இறுதி போட்டிக்கு ஊட்டி பெண் தேர்வு
x
தினத்தந்தி 28 March 2018 3:45 AM IST (Updated: 28 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

‘திருமதி இந்தியா’ என்ற அழகிக்கான இறுதி போட்டிக்கு ஊட்டியை சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான லாரன்ஸ் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகளின் குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு ராணுவ கட்டுப்பாடு போன்று, ஒழுக்கம், குதிரை சவாரி, துப்பாக்கி சுடுதல் உள்பட பல்வேறு பயிற்சிகள் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

லாரன்ஸ் பள்ளியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நிஷா சிங் (வயது 32) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக அலுவலக பணியாளராக தங்கி பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் தாகூர் கமல் (35) அதே பள்ளியில் உணவு தயாரிப்பு மேலாளராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு அதோஷ் (9) என்ற மகன் உள்ளார்.

டெல்லியில் தனியார் அமைப்பு, திருமணமான பெண்களுக்கான ‘திருமதி இந்தியா குயின் ஆப் சப்டெயின்ஸ்’ என்ற பட்டத்துக்கான அழகிப்போட்டி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு போட்டிக்கான தகுதி சுற்று மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நிஷா சிங் கலந்துகொண்டார்.

மேலும் ஸ்கைப் மூலம் தனித்திறமைகள், பொது அறிவுகள், குணாதிசயங்கள் குறித்து ஒவ்வொருக்கும் தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த இரண்டு தகுதி சுற்றிலும் நிஷா சிங் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தகுதி சுற்று போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 12 பேர் கலந்துகொண்டனர். இந்தியா முழுவதிலும் இருந்து 45 பேர் கலந்துகொண்டு, அதில் 22 பேர் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லாரன்ஸ் பள்ளியில் இருந்து நிஷா சிங் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நீலகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. திருமதி இந்தியா பட்டத்துக்கான இறுதி போட்டி அடுத்த (ஏப்ரல்) மாதம் 13-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. போட்டியில் நடுவர்களாக நடிகைகள் மகிமா சவுத்ரி, பாக்கிய ஸ்ரீஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இதுகுறித்து நிஷா சிங் கூறியதாவது:-

ஒரு பெண் தனது வாழ்க்கையில் திருமணமாகி குழந்தை பெற்று விட்டால் மட்டும், அவளது கனவு நிறைவேறி விடாது. திருமணத்துக்கு முன்பு நினைத்த லட்சியங்களை திருமணத்துக்கு பின்னரும் சாதிக்கலாம். பெண்கள் எல்லா இடங்களிலும் வளர்ச்சியுடன் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும். நான் ‘திருமதி இந்தியா குயின் ஆப் சப்டெயின்ஸ் 2018’ என்ற பட்டத்துக்கான அழகிப்போட்டிக்கு தேர்வானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. திருமணமான பெண்களாலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்று மற்ற பெண்கள் இடையே ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில் போட்டியில் கலந்துகொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story