அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கோரி தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2018 2:30 AM IST (Updated: 28 March 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கோரி கூடங்குளத்தில் தி.மு.க.வினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கூடங்குளம்,

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்கக்கோரி கூடங்குளத்தில் தி.மு.க.வினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரத போராட்டம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் தி.மு.க. சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மு.அப்பாவு தலைமை தாங்கினார். ராதாபுரம் ஒன்றிய செயலாளர் கேசவன், முன்னாள் யூனியன் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெனிபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்பெல்சி வரவேற்றார்.

கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இந்த பணிகளில் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தனியார் ஒப்பந்த நிறுவனங்களில் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளிலும் ராதாபுரம் தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு வேலை வாப்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

தடையில்லா சான்று நிர்பந்திக்க கூடாது

அணுமின் நிலைய வளர்ச்சி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும். போராட்ட காலங்களில் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தனியார் ஒப்பந்த கூலித்தொழிலாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் வேலை வழங்க வேண்டும்.

வெளிமாநில ஒப்பந்த தொழிலாளிகளுக்கு போலீஸ் தடையில்லா சான்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவது போன்று ராதாபுரம் தாலுகாவில் உள்ளவர்களுக்கும் போலீஸ் தடையில்லா சான்று கேட்டு நிர்பந்திக்க கூடாது. ஒப்பந்த தொழிலாளிகளுக்கும் வருங்கால வைப்பு நிதி வழங்கவேண்டும். என்ஜினீயரிங் படிக்கும் ராதாபுரம் பகுதி மாணவர்களுக்கு அணுமின் நிலையத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். கூடங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் வீடு மற்றும் வணிக வளாகங்கள் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

உண்ணாவிரத போராட்டத்தில் வக்கீல் சந்திரசேகர், முன்னாள் கவுன்சிலர்கள் பிச்சை, சுந்தரலிங்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவர் அரசன், தி.மு.க மாவட்ட துணைச்செயலாளர் சித்திக் மற்றும் தி.மு.க.வினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர்், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மும்பை மாநில தி.மு.க அமைப்பாளர் அலிசேக் மீரான், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். கூடங்குளம் ஊராட்சி கழக செயலாளர் துரை நன்றி கூறினார்.

Next Story