சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுத்த சபாநாயகரை பா.ஜ.க. வினர் விமர்சிப்பதா? நமச்சிவாயம் கண்டனம்


சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுத்த சபாநாயகரை பா.ஜ.க. வினர் விமர்சிப்பதா? நமச்சிவாயம் கண்டனம்
x
தினத்தந்தி 28 March 2018 5:00 AM IST (Updated: 28 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுத்த சபாநாயகரை பா.ஜ.க.வினர் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது செல்லும் என்று ஐகோர்ட்டில் தீர்ப்பு அளித்தது. இதையொட்டி நேற்று முன்தினம் சட்டசபை கூட்டம் நடந்த போது அங்கு வந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தநிலையில் முதல்-அமைச்சர், சபாநாயகர் மீது பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விவகாரத்தையொட்டி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் ஏழுமலை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறுமுகம், விநாயகமூர்த்தி, நீல.கங்காதரன், பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை சட்டமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அவர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். அதன்படி நடவடிக்கை எடுக்க்கப்படும்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிட ஆதரவு எங்களுக்கு உள்ளது. அவர்களின் வழிகாட்டுதல்படிதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேச நானும், முதல்-அமைச்சரும் நாளை (இன்று) டெல்லி செல்ல உள்ளோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுத்த சபாநாயகரை பா.ஜ.க.வினர் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது. இதனை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story