ரஜினி மக்கள் மன்றத்துக்கு தொகுதிவாரியாக நிர்வாகிகளை நியமிக்க முடிவு


ரஜினி மக்கள் மன்றத்துக்கு தொகுதிவாரியாக நிர்வாகிகளை நியமிக்க முடிவு
x
தினத்தந்தி 28 March 2018 4:00 AM IST (Updated: 28 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் ரஜினி மக்கள் மன்றத்துக்கு தொகுதி வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

புதுச்சேரி,

அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் ரஜினி அறிவித்துள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். புதுவை மாநிலத்திலும் நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ரஜினி மன்ற நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் ஆனந்தா இன் ஓட்டலில் நேற்று நடந்தது.

இதற்காக தொகுதிக்கு 10 பேர் வீதம் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு 300 பேர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடன் அகில இந்திய ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் சுதாகர், மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக தனித்தனியாகவும் குழுவாகவும் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் ரஜினிசங்கர் தலைமை தாங்கினார். கலந்தாய்வு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ராஜு மகாலிங்கம் பேசியதாவது:-

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது உலகமே ரஜினிகாந்தை வியந்து பார்க்கிறது. அவர் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே அரசியல் பிரவேசம் செய்கிறார். தனது ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுக்கும் படக்காட்சியை மாவட்டந்தோறும் திரையிட்டு காட்டுகிறோம்.

அவரது பேச்சை கேட்டவர்களில் 95 சதவீதம் பேர் தற்போது ஒற்றுமையாக உள்ளனர். தங்களுக்கு பொறுப்பு வேண்டும் என்பதற்காக ஒற்றுமையை மறந்து தங்களை முன்னிலைப்படுத்தக் கூடாது. நாம் ஒற்றுமையாக இருப்பது அவசியம். அப்படி இருந்தால் தான் நம்மால் மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர். நாம் அனைவரும் அவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.

புதுச்சேரியை பொறுத்தவரை ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 10 நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். ஒவ்வொரு தெருவிலும் நமது மன்ற கொடி பறக்க வேண்டும் என்று தலைவர் விரும்புகிறார். நியமிக்கப்படும் நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தலா 10 பூத்தை நிர்வகிக்க வேண்டும். நமது மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு வண்ணத்திலும், மற்றவர்களுக்கு வேறொரு வண்ணத்திலும் அடையாள அட்டை வழங்க தலைவர் கூறியுள்ளார்.

இவ்வாறு ராஜு மகாலிங்கம் பேசினார்.

முன்னதாக மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக ரஜினியின் வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற புதுவை மாநில செயலாளர் பிரபாகர், இணை செயலாளர்கள் ஜோதிகுமார், காத்தவராயன், நெப்போலியன் ராஜா, யுவராஜ், இளைஞர் அணி செயலாளர் காமராஜ், செய்தி தொடர்பாளர் தாரகைராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story