பூட்டிக்கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது


பூட்டிக்கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2018 6:00 AM IST (Updated: 28 March 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 112 பவுன் நகை மற்றும் கார் பறி முதல் செய்யப்பட்டது.

ஆவடி,

ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் நந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஆவடியை அடுத்த வெள்ளானூர் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை வழி மடக்கி அதில் இருந்தவர்களை விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பிரகாஷ் என்ற முட்டை பிரகாஷ்(வயது 26) மற்றும் நரசிம்மன் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆவடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்தது தெரிந்தது.

இவர்கள் கடந்்த 19-ந்்தேதி திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேந்த என்ஜினீயர் ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 85 பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர். இவர்கள் இருவரும் காமராஜ் என்ற ராஜன், அப்பு என்ற சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும், இருவரும் கடந்த 3 மாதங்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 112 பவுன் நகை, ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பிரகாஷ் மற்றும் நரசிம்மனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

இதில் தலைமறைவாக உள்ள காமராஜ் என்ற ராஜன், அப்பு என்ற சீனிவாசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story