ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை


ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 28 March 2018 4:00 AM IST (Updated: 28 March 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை முழுமையாக பொய்த்து போனதால் ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ராமநாதபுரம்,

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, விவசாய இணை இயக்குனர் இந்திராகாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-

மாவட்டத்தில் கடந்த ஆண்டு முற்றிலும் பருவமழை பொய்த்து விட்டது. ஆனால் அரசின் சார்பில் தமிழகம் வறட்சியால் பாதிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது முற்றிலும் மாவட்டத்தின் நிலைமைக்கு மாறானதாக உள்ளது. எனவே, ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் கடலோர பகுதிகளில் விவசாய நிலங்கள் இல்லாத பகுதிகளில் பெய்யும் மழையை கணக்கில் கொண்டு புள்ளி விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இதனை மாற்றி விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் மழைமானி அமைக்க வேண்டும்.

அப்போதுதான் உண்மை நிலைமை தெரியவரும். கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவரும் முழுமையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மழை பெய்யாததற்கு வழுதூர் மின்நிலையம் தான் காரணம் என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டு கொடுத்த விதைகளில் பெரும்பாலானவை முளைப்புத்திறன் குறைவாக இருந்தது. இவ்வாறு பேசினர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் நடராஜன் பேசியதாவது:- மாவட்டத்தில் மழை பெய்த நிலவரம், கடும் வறட்சி பாதிப்பு போன்றவை குறித்து முதல்-அமைச்சரிடம் நேரில் கூறியுள்ளேன். அரசின் சார்பில் கூறப்பட்டது மாநில அளவிலான நிலவரம் மட்டுமே. மாவட்ட நிலவரம் அல்ல. எனவே, விவசாயிகள் அச்சப்படத்தேவையில்லை. மாவட்டத்தில் மழைமானிகளை இடம் மாற்றி அமைப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும் விவசாய நிலங்கள் உள்ள புதிய இடங்களில் மழைமானிகள் அமைக்கப்படும். வழுதூர் மின்உற்பத்தி நிலையத்திற்கும் மழை பெய்வதற்கும் சம்பந்தம் இல்லை. இந்த ஆண்டு முழு முளைப்புத்திறன் உள்ள விதைகள் விற்பனை செய்யப்படும். மாவட்டத்தில் தேவையான அளவு உரம் கையிருப்பில் உள்ளது.

2017-18ம் ஆண்டிற்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 696 விவசாயிகள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 640 எக்டரில் பயிர்காப்பீடு செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். 

Next Story