224 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி இல்லை


224 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி இல்லை
x
தினத்தந்தி 28 March 2018 4:00 AM IST (Updated: 28 March 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

224 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும், தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் அமித்ஷா கூறினார்.

சிக்கமகளூரு,

224 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும், தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் அமித்ஷா கூறினார்.

கூட்டணி இல்லை

2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்கு வந்த அமித்ஷா நேற்று காலை சிவமொக்காவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாவணகெரேவுக்கு சென்றார். தாவணகெரே டவுனில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும் போட்டியிடும். மேலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைக்காது. தனிப்பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

சாதிகளை உடைக்கும் வேலைகளில்...


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் நிதியே ஒதுக்கவில்லை என்று பிரதமர் மீது சித்தராமையா தேவையில்லாமல் குறைகூறி வருகிறார். தேர்தலில் போட்டியிட இதுவரை எந்த மடாதிபதியும் சீட் கேட்கவில்லை. அதுபற்றி இப்போது எதுவும் கூற முடியாது. வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

சித்தராமையா சாதிகளை உடைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் எடியூரப்பா மக்கள் அனைவரும் வேண்டும் என்று நினைக்கிறார். மகதாயி, கலசா-பண்டூரி குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக பிரதமர் மோடியுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன்.

தனி மத அங்கீகாரம்

காபி, தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு காண்போம். இதற்காக ரூ.500 கோடியில் ஒரு நவீன ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் அமர்ந்த உடனேயே இது நடக்கும். மத்தியில் பா.ஜனதா அரசு நடந்து வருவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்கு அதிகரித்துள்ளது. முஸ்லிம் அமைப்புகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை இந்த காங்கிரஸ் அரசு வாபஸ் பெற்றுள்ளது. பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா(பி.எப்.ஐ.) அமைப்புக்கு தடை விதிக்குமாறு கேரளா அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது.

ஆனால் கர்நாடகத்தில் சித்தராமையா, அந்த அமைப்பினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுகிறார். இது வாக்குவங்கி நோக்கத்தில் செய்யப்படும் கீழ்த்தரமான அரசியல் ஆகும். இது கர்நாடகத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவில் சித்தராமையா இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்?. முன்பு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்து விரோத தலைவர்


சித்தராமையாவின் இந்த நடையை பார்க்கும்போது, அவர் பின்தங்கிய பிரிவுகளின் தலைவர் இல்லை, இந்து விரோத தலைவர். இந்துக்களை பிரிக்க சித்தராமையா முயற்சி செய்கிறார். இந்துக்களை எதிர்க்கும் கொள்கையை பின்பற்றி வரும் சித்தராமையாவின் செயல் சரியல்ல. இதுபோன்ற கொள்கையை அனுசரிப்பவர்களை நான் பார்த்தது இல்லை. இது எடியூரப்பா முதல்-மந்திரி ஆவதில் இருந்து தடுக்க சித்தராமையா தீட்டிய சதி ஆகும்.

இதை லிங்காயத் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். தேர்தலில் சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மடங்கள் மற்றும் கோவில்களையும் அரசே எடுத்துக்கொள்ள முடிவு செய்தது. இதை பா.ஜனதா கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து அந்த முடிவை மாநில அரசு கைவிட்டது. நான் கடந்த சில மாதங்களில் மட்டும் 6 முறை கர்நாடகத்திற்கு வந்து மக்களை சந்தித்து சென்றேன். மக்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் பார்த்தது இல்லை

சித்தராமையாவின் செயல்பாட்டை காங்கிரஸ் தடுத்து நிறுத்தாவிட்டால் தேர்தலில் அக்கட்சி பெரிய பின்னடைவை சந்திக்கும். ஒருபுறம் இந்துக்களின் ஒற்றுமை குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பேசுகிறார். மற்றொருபுறம் அதே கட்சியை சேர்ந்த முதல்-மந்திரி சித்தராமையா இந்துக்களை பிரிக்கிறார். ஒரே அரசியல் கட்சியில் இதுபோன்ற ஒரு கருத்து வேற்றுமை இருப்பதை நான் பார்த்தது இல்லை.

ஊழல் குறித்து போட்டி வைத்தால் சித்தராமையா அரசு முதல் பரிசு பெறும் என்று ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் சமீபத்தில் கூறினார். வங்கி மோசடி வழக்கில் தப்பியோடிய நிரவ்மோடியை இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மடாதிபதியை சந்தித்து பேசினார்


இதனை தொடர்ந்து தாவணகெரேயில் இருந்து சித்ரதுர்காவுக்கு சென்ற அமித்ஷா அங்கு பொதுமக்களிடம் பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் கைப்பிடி அரிசி திட்டத்தை தொடங்கி வைத்த அவர் வீடு, வீடாக சென்று மக்களிடம் அரிசிகளை வாங்கினார். அதன்பின்னர் சித்ரதுர்கா டவுனில் உள்ள ஸ்ரீகிரி தெரபாலு மடத்திற்கு சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்து முருகாசரண மடத்திற்கும் சென்ற அவர் மடாதிபதியை சந்தித்து பேசினார்.

அதன்பின்னர் சித்ரதுர்கா டவுனில் உள்ள மதகிரி நாயக்கா, ஒனகே ஒகப்பா ஆகியோரின் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தொட்டபடி கிராமத்தில் அமித்ஷா உணவு தானியங்களை பெற்றார். இது உணவுதானிய பிரசாரம் ஆகும். அந்த உணவு தானியங்களை சமைத்து உண்பதாக அவர் கூறினார். அவர் பேசுகையில், கடந்த 4½ ஆண்டுகளில் கர்நாடகத்தில் 3,500 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த அரசின் அலட்சிய போக்கால் இந்த தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்றார்.

Next Story