மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம்


மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம்
x
தினத்தந்தி 28 March 2018 3:30 AM IST (Updated: 28 March 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மண்டியா,

மேல்கோட்டையில் பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவிலில் வைரமுடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வைரமுடி உற்சவம்

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா மேல்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவில் அமைந்துள்ளது. மாநில அரசின் அறநிலைய துறைக்கு கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. உலக பிரசித்தி பெற்ற செலுவநாராயணசாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த கோவிலுக்கு சொந்தமான வைர, தங்க ஆபரணங்கள் மண்டியா கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆபரணங்கள் திருவிழா காலத்தில் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்படும்.

வைஷ்ணவ சீர்திருத்தவாதியான ராமானுச்சார்யா 14 ஆண்டுகள் வாழ்ந்த மிகவும் புனிதமான இடங்களில் மேல்கோட்டையும் ஒன்றாகும். திருப்பதியில் கொண்டாடப்படும் ‘பிரம்மோற்சவா‘, ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் ‘கோதரோத்சவா‘, காஞ்சீபுரத்தில் கொண்டாடப்படும் ‘கருதோத்சவா‘ ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக மேல்கோட்டையில் கொண்டாடப்படும் ‘வைரமுடி உற்சவம்‘ சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தைகய சிறப்பு வாய்ந்த ‘வைரமுடி உற்சவம்‘ நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று காலை 4.30 மணி வரை நடந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த வைரமுடி உற்சவத்தையொட்டி கடந்த 23-ந்தேதி மண்டியா மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள வைரமுடி மற்றும் ராஜமுடி, வைர கிரீடம் உள்ளிட்ட விலை மதிக்கமுடியாத ஆபரணங் களை மாவட்ட கலெக்டர் மஞ்சுஸ்ரீ, கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அந்த ஆபரண பெட்டிகளுக்கு சிறப்பு பூஜை செய்து பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வைரமுடியும், ராஜமுடியும் மற்றும் வைர ஆபரணங்களால் செலுவநாராயணசாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் அலங்கரிக்கப்பட்டன.

பின்னர் செலுவநாராயணசாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேல்கோட்டையில் முக்கிய வீதிகள் வழியாக இந்த தேரோட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வைரமுடி உற்சவம் முடிந்ததும், வைரமுடி பலத்த பாதுகாப்புடன் அரசு கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராஜமுடி சில நாட்களுக்கு பிறகு அனுப்பி வைக்கப்படும். இந்த விழாவையொட்டி மேல்கோட்டையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதிகா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story