7 பேரிடம் மாநில மனித உரிமை ஆணைய துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


7 பேரிடம் மாநில மனித உரிமை ஆணைய துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x
தினத்தந்தி 28 March 2018 4:37 AM IST (Updated: 28 March 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

வாகன சோதனையின் போது, இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்ததில் பெண் பலியான சம்பவம் குறித்து 7 பேரிடம் மாநில மனித உரிமை ஆணைய துணை போலீஸ் சூப்பிரண்டு என்.பாலகிருஷ்ணபிரபு விசாரணை நடத்தினார்.

திருச்சி,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்கிற தர்மராஜா (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உஷா (30). கணவன்-மனைவி இருவரும் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அங்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்ததில் உஷா பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது பாய்லர் ஆலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு என்.பாலகிருஷ்ணபிரபு நேற்று திருச்சி வந்தார். அவர் சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தினார். உஷா பலியான வழக்கின் விசாரணை அதிகாரியான போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீராளன், ஏட்டுகள் சுரேஷ், சாந்தகுமார், பெண் போலீஸ் டோனா, ஊர்க்காவல் படை வீரர் பார்த்திபன் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தினார்.

ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்டார். மேலும் முதல் தகவல் அறிக்கையின் நகலையும் (எப்.ஐ.ஆர்) பெற்றுக்கொண்டார். நேற்று காலை தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை நடைபெற்றது.

இதுகுறித்து துணை சூப்பிரண்டு என்.பாலகிருஷ்ணபிரபு கூறும்போது, “இந்த வழக்கில் மனித உரிமை மீறப்பட்டு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அந்த உத்தரவின் பேரில் முதல்கட்டமாக விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக மோட்டார் சைக்கிளில் இருந்து அவர்கள் கீழே விழுந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தப்படும். உஷாவின் கணவரிடமும் விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் திருச்சி சிறையில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணை முடிய சில நாட்கள் ஆகும்” என்று கூறினார்.

Next Story