ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆம்பூர்,
தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் ஆம்பூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் பெரியவரிகம் என்ற இடத்தில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆம்பூர் அருகே உள்ள இந்த தொழிற்சாலையில் ஆம்பூரை சேர்ந்த ரங்கநாதன் (வயது 46), பந்தேரிபல்லியை சேர்ந்த சின்னதம்பி மகன் கோதண்டன் (31), கீழ்மிட்டாளத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் செல்வம் (25) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
நேற்று தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சக தொழிலாளர்கள் டீ குடிக்க வெளியில் சென்றனர். கோதண்டனும், செல்வமும் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ரங்கநாதன் இந்த பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து திடீரென விஷவாயு தாக்கியதில் செல்வம் அந்த தொட்டியிலேயே மூழ்க ஆரம்பித்தார். அவரை காப்பாற்ற கோதண்டன் முயற்சி செய்தபோது அவரையும் விஷவாயு தாக்கியது. இதனைப் பார்த்த ரங்கநாதன் தொட்டியில் இறங்கி 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் விஷவாயு தாக்கவே மூழ்கினார்.
அப்போது டீ குடித்து விட்டு சக தொழிலாளர்கள் வந்தபோது 3 பேரும் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மூழ்கிக்கொண்டிருந்ததை அறிந்து கூச்சலிட்டனர். சில தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கி 3 பேரையும் மீட்க முயன்றனர். நீண்ட நேரம் போராடிய நிலையில் வெளியே தூக்கியபோது தொட்டியில் மூழ்கிய ரங்கநாதன், கோதண்டன், செல்வம் ஆகிய 3 பேரும் விஷவாயு தாக்கி இறந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, ஆம்பூர் தாசில்தார் சாமுண்டீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஒரே நேரத்தில் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருமணம் நடக்க இருந்த நிலையில் சாவு
விஷவாயு தாக்கி இறந்த 3 பேரில் செல்வம், கோதண்டன் ஆகிய 2 பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 2 பேரின் வீட்டில் அவர்களுக்கு பெண் பார்த்து அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்ததாக தெரிகிறது. திருமணத்திற்கு முன்பே 2 பேரும் இறந்துள்ளதால் உறவினர்கள் கதறி, கதறி அழுதனர்.
இவர்களில் செல்வம் சில மாதங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரை சில மாதத்திலேயே தொழிற்சாலை நிர்வாகம் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறக்கியது எப்படி என்று தெரியவில்லை. அவருக்கு தகுந்த பயிற்சி, பாதுகாப்பு உபகரணம் போன்ற எதுவும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இழப்பீடு வழங்கக்கோரி தொழிற்சாலையின் கதவை இழுத்து மூடி உறவினர்கள் போராட்டம்
விஷ வாயு தாக்கி பலியான 3 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவர்களின் உறவினர்கள் தொழிற்சாலையின் கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விஷவாயு தாக்கி 3 பேர் இறந்த தகவல் அறிந்ததும் சகதொழிலாளர்களும், 3 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பதற்றத்துடன் தொழிற்சாலைக்கு வந்தனர். 3 பேரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அதைத்தொடர்ந்து 3 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப போலீசார் வேனில் ஏற்றினர்.
அப்போது 3 பேரின் சாவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகம் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும், அதுவரை உடலை இங்கிருந்து எடுத்து செல்லக்கூடாது என கூறி தொழிற்சாலையின் கதவுகளை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆம்புலன்சையும் செல்லவிடாமல் முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு மூதாட்டி தனது பேரனின் உடலை பார்த்து மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து வருவாய்துறையினரும், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரகாஷ் பாபு மற்றும் போலீசாரும் போராட்டம் நடத்தியவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story