ஈரோடு தொழிற்சாலைகளில் தோல் வாங்கியதில் ரூ.69 லட்சம் மோசடி
தோல் வாங்கியதில் ரூ.69 லட்சம் மோசடி செய்த ராணிப்பேட்டையை சேர்ந்த வியாபாரி பிடிபட்டார்.
ஈரோடு,
ஈரோடு சிறு தோல் தொழிற்சாலைகளில் தோல் வாங்கியதில் ரூ.69 லட்சத்தை மோசடி செய்த ராணிப்பேட்டையை சேர்ந்த வியாபாரி பிடிபட்டார்.
ஈரோடு சிறு தோல்பதனிடும் தொழிற்சாலை சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு சிறு தோல் பதனிடும் தொழிற்சாலை சங்கத்தின் கீழ் பல தோல் பதனிடும் ஆலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலை உரிமையாளர்களிடம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த கணேஷ் மற்றும் அவருடைய மனைவி கவிதா ஆகியோர் தோல் தொடர்பான தொழில் தொடங்குவதாகவும், அவர்களுக்கு தோல் வேண்டும் என்றும் ஈரோடு சூளையை சேர்ந்த ரபீக் அலி என்பவர் தொடர்பு கொண்டார். அவரை நம்பி 12 பேர் தங்களிடம் இருந்த தோல்களை பில்லுடன் ரபீக் அலியிடம் வழங்கினார்கள்.
ஆனால் தோலுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. எனவே ரபீக் அலியிடம் பணம் கேட்டபோது, அவர் தனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறி, கணேசை கை காட்டினார். தோல் உற்பத்தியாளர்கள் நேரடியாக ராணிப்பேட்டைக்கு சென்று கணேசை பார்த்தனர். அப்போது அவர் ஒரு சிறு தொகையை மட்டும் கொடுத்தார். அதன் பின்னர் பணம் கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பணம் போக மீதி ரூ.69 லட்சத்து 22 ஆயிரத்து 523 வழங்க வேண்டும். இதுபற்றி கேட்டால் மிரட்டி வருகிறார். இதனால் எங்கள் சங்க உறுப்பினர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மோசடி செய்யப்பட்ட பணத்தை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் மனுவை ஈரோடு சிறு தோல் பதனிடும் தொழிற்சாலை சங்கத்தின் தலைவர் முகமது சுபைர், துணைத்தலைவர் பார்த்திபன், செயலாளர் முகமது ரகமதுல்லா மற்றும் பாதிக்கப்பட்டோர் வந்து கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், இதுபற்றி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு பணம் கொடுக்க வேண்டிய நபர் ஈரோடு கோர்ட்டு வளாகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விரைந்து சென்று அவரை பிடித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், கணேஷ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஈரோட்டில் இருந்து தோல் பதனிடுவோர் பலரிடமும் இதுபோன்று தோல் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து தோல் பதனிடும் ஆலை உரிமையாளர் அனிபா என்பவர் கூறியதாவது:-
ஏற்கனவே தொழில் பாதிப்பில் இருக்கும்போது எப்படியாவது வியாபாரம் நடைபெறாதா என்ற ஏக்கத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் மொத்தமாக தோல் எடுத்துக்கொள்கிறேன் என்று கணேஷ் தொலைபேசியில் கூறியதாலும், ரபீக் அலி ஈரோட்டை சேர்ந்தவர் என்பதாலும் நம்பி கொடுத்து விட்டோம். ஆனால் திட்டமிட்டு ரபீக் அலி, கணேஷ் மற்றும் அவருடைய மனைவி கவிதா ஆகியோர் எங்களை ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். நாங்கள் விசாரித்தபோது கணேஷ் வாங்கிச்சென்ற தோல்களை குறைந்த விலைக்கு வேறு சில தொழிற்சாலைகளுக்கு விற்று கிடைத்த பணத்தை அவரே வைத்துக்கொண்டது தெரியவந்தது. மேலும், ஈரோடு சிறு தோல் பதனிடுவோர்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மோசடி வேலையை செய்ததும் தெரியவந்தது.
எனவே எங்களுக்கு உரிய பணத்தை பெற்றுத்தரவும், தொடர்ந்து வேறு யாரையும் அவர்கள் ஏமாற்றாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேஷ் மீது ஏற்கனவே மோசடி வழக்கு ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி ஈரோட்டில் அவர் ரூ.1 கோடியே 82 லட்சம் அளவுக்கு மோசடி செய்து இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story